உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  3 பேர் இறந்ததால் 22 புலிகளை பிடித்து பரிசோதனை; கர்நாடக வனத்துறை நடவடிக்கையால் சர்ச்சை

 3 பேர் இறந்ததால் 22 புலிகளை பிடித்து பரிசோதனை; கர்நாடக வனத்துறை நடவடிக்கையால் சர்ச்சை

சென்னை: கர்நாடக மாநிலம், மைசூரு அருகில் வெவ்வேறு இடங்களில் மூன்று பேர், புலி தாக்கி இறந்ததைத் தொடர்ந்து, அம்மாநில வனத்துறையினர், 22 புலிகளை பிடித்து மருத்துவ பரிசோதனை செய்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம், மைசூரு அருகில், நாகர் ஹோலே புலிகள் காப்பகம், பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளன. இவற்றில், புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், சபாரி வாயிலாக, புலிகளைக் காண, அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருகின்றனர். புலிகள் காப்பகங்கள் அருகில், மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன. இங்கு அரிதாக, வன விலங்குகள் மனிதர்களை தாக்கும் நிகழ்வுகள் நடக்கும். ஆனால், சமீபத்தில் இந்த கிராமங்களில் வெவ்வேறு இடங்களில், நான்கு பேரை புலிகள் தாக்கி உள்ளன. இதில், மூன்று பேர் இறந்தனர். இதனால், புலிகள் காப்பகங்களின் சுற்றுப்புற கிராமங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டது. சில இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து, பந்திப்பூர் புலிகள் காப்பகம், நாகர் ஹோலே புலிகள் காப்பகம், கபினி தேசிய பூங்கா ஆகியவற்றில், பார்வையாளர்கள் அனுமதி நிறுத்தப்பட்டது. அந்த சமயத்தில், புலிகள் காப்பகங்களின் நிர்வாகம், களப்பணியாளர்களை அனுப்பி புலிகளை பிடிக்க உத்தரவிட்டது. கடந்த 30 நாட்களில், 12 குட்டிகள் உட்பட, 22 புலிகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். அடர் வனப்பகுதிகளில், கூண்டுகள் வைத்து, இந்த புலிகள் பிடிக்கப்பட்டன. அவை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றின் மரபனு மாதிரி சேகரிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மனிதர்களை கொன்ற புலியை கண்டுபிடித்து, அதை உயிரியல் பூங்காவுக்கு அனுப்பவும், பிற புலிகளை மீண்டும் வனப்பகுதியில் விடவும், வனத்துறையினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: பொதுவாக ஒரு பகுதியில், புலிகள் உள்ளூர் மக்களை தாக்கினால், அந்த பகுதியில் நடமாடும் புலி எது என்று கண்டுபிடித்து, அதை உயிரியல் பூங்காவுக்கு அனுப்புவர். இந்த நடைமுறைக்கு மாறாக, காட்டில் உள்ள, 22 புலிகளை பிடித்து, மருத்துவப் பரிசோதனை செய்தது, புதிதாக உள்ளது. காட்டில் இருக்கும் புலிகளை பிடிக்க, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டி விதிகள் அடிப்படையில், நடவடிக்கை எடுத்ததாக, கர்நாடக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இது போன்று குட்டிகளுடன் இருக்கும் புலிகளை பிடித்து, பரிசோதனை செய்து திரும்ப விடுவது, அதன் இயல்புத் தன்மையை பாதிக்கும். அதன் பின் காப்பகத்தில் புலிகள் இயல்பாக இருப்பதில், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி