கோவை :'ஆதார்' அடையாள அட்டைக்கான பதிவு, கோவை மாவட்டத்தில் இன்று துவங்குகிறது.இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும், தனி அடையாள எண்ணுடன் கூடிய அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகளை, மத்திய அரசு செய்துள்ளது. 'ஆதார்' எனப்படும் இந்த அட்டையை, குடிமக்கள் தங்களது அடையாள ஆவணமாக, அரசுத் திட்டங்களில் பயன் பெறவும், வங்கி உள்ளிட்ட சேவைகளை தடையின்றி எளிதில் பெறவும் பயன்படுத்தலாம்.கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், 'ஆதார்' அடையாள எண் பதிவு செய்யும் பொறுப்பை, தேசியமயமாக்கப்பட்ட வங்கியான, 'சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா' ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த சேவைக்கான முகவர்களாக,'ஸ்ரீ இன்ப்ரா பின் லிமிடெட்' நிறுவனத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர். போட்டோ, விரல் ரேகைகள், கருவிழி அடையாளங்கள், முகவரி, கல்வி, குடும்பம், வேலை விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.விவரம் பதிவு செய்யப்பட்ட 20 முதல் 40 நாட்களில், 'ஆதார்' அடையாள அட்டை, தபால் மூலம் அவரவர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.கோவை மாவட்டத்தில் இச்சேவை, இன்று காலை 10.30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் துவக்கப்படுகிறது. கலெக்டர் கருணாகரன், போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, மாவட்டம் முழுவதும்,'சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா'வின் 15 கிளைகள் மூலம், அனைத்து பகுதிகளிலும் இப்பதிவு மேற்கொள்ளப்படும். 'இது ஒரு இலவச சேவை; அனைத்து தரப்பினரும், இச்சேவையில் பங்கு பெற்று பயனடைய வேண்டும்' என, வங்கி துணை மண்டல மேலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.