மதுரை:ஆண்டறிக்கைகளை தாக்கல் செய்யாததால் மூட்டாவை (மதுரை காமராஜ் பல்கலை ஆசிரியர் மன்றம்) கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட பதிவாளர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.இச்சங்கத்தின் உறுப்பினர் டாக்டர் பி.சுந்தரராஜ் பதிவுத்துறை ஐ.ஜி.,க்கு ஏற்கனவே அனுப்பிய புகாரில்; நான் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி பொருளாதார உதவிப்பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். பணியில் சேர்ந்த காலம் முதல் மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை ஆசிரியர் மன்றத்தில் உறுப்பினராக சேர்ந்து, அதற்கான சந்தா, நன்கொடைகள் போன்றவற்றை செலுத்தி வருகிறேன்.
இவை என் வங்கிக்கணக்கு மூலம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் எங்கள் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கிளையின் கணக்குகளோ அல்லது ஒட்டு மொத்த மூட்டா அங்கத்தினர்களின் கணக்குகளோ இதுவரை எனக்கு காண்பிக்க படவில்லை. 3 ஆண்டுகளாக தொடர்ந்து கடிதம் மூலமும், நேரிலும் விசாரித்தும் எந்த பதிலும் முறையாக வழங்கப்படவில்லை. இது குறித்து பதிவுத்துறையின் 'வெப்சைட்டில்' பார்த்த போது சங்க கணக்குகள் குறித்து அதிர்ச்சி அடைந்தேன். 4 ஆயிரத்திற்கும் மேலான உறுப்பினர்கள் இச்சங்கத்தில் உள்ளனர் என கூறிவருகின்றனர். அவர்களிடம் இருந்து மாதம் ரூ.100 வசூலிக்கப்படுகிறது.
தமிழகஅரசு ஆசிரியர்களுக்கு புதிய சம்பளத்தை நடைமுறைபடுத்துவதற்கு முன் 3 மாத சம்பளத்தை இடைக்கால நிவாரணமாக கொடுத்த போது ரூ.600 மற்றும் ரூ. ஆயிரம் (உறுப்பினர்களின் தகுதிக்கேற்ப) ஒவ்வொருவரிடம் இருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டது. அது போல சம்பளஉயர்வு நிலுவைத்தொகை பெற்றுக் கொண்ட போது ரூ. 5 ஆயிரம் வீதம் ஒவ்வொரு உறுப்பினரிடம் இருந்தும் கட்டாயமாக நன்கொடை பெறப்பட்டது. மேலும் எம்.எல்.சி., தேர்தல் வருவதால் ரூ. ஆயிரத்தை அனைத்து உறுப்பினர்களும் கட்டாயமாக கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
இப்படி வசூலாகும் தொகை ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ. 48 லட்சம். அது போல நன்கொடையாக சில கோடி ரூபாய் பிரிக்கப்படுகிறது.இச்சங்கத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2.72 கோடி.பதிவுத்துறை தகவல்படி கடந்த 11 ஆண்டுகளுக்கான தொகை ரூ.20 முதல் 30 கோடிக்கு இணையாகலாம் என மதிப்பிடப்படுகிறது. எனவே இச்சங்க வரவு, செலவு கணக்குகளை தரும்படியும், பதிவுத்துறை வெப்சைட்டில் பிரசுரிக்கப்பட்டது உண்மையான தகவல் எனில் உடனடியாக அச்சங்கத்தின் வங்கி கணக்குகளை நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இப்புகாரின் பேரில், மதுரை (தெற்கு) மாவட்ட பதிவாளர் பல்கலை துணைவேந்தர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் ஆண்டறிக்கைகளை தாக்கல் செய்யாததால், மூட்டாவை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.