செல்வப்பெருந்தகைக்கு எதிராக கட்சி மேலிடத்தில் 4 பக்க புகார் மனு
தமிழக காங்கிரசில் அதிருப்தியில் உள்ள 15 மாவட்டத் தலைவர்கள், டில்லியில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடன்கரை சந்தித்து, செல்வப்பெருந்தகை தன்னிச்சையாக செயல்படுவதாக, 4 பக்கம் புகார் மனு அளித்துள்ளனர். கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், முன்னாள் தலைவர் அழகிரி, முன்னாள் எம்.பி.,க்கள் செல்லக்குமார், ஜெயகுமார் போன்றவர்களுக்கு, 'சீட்' கிடைக்கவில்லை. அவர்களும், அவர்களின் ஆதரவு மாவட்டத் தலைவர்களும், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக செயல்பட துவங்கி உள்ளனர்.அதேபோல், 10 எம்.எல்.ஏ.,க்களும் அவருக்கு எதிராக செயல்படுகின்றனர். சமீபத்தில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவரின் வீட்டில், அந்த பத்து பேரும் கூடி, ரகசிய ஆலோசனை நடத்தி உள்ளனர்.இந்நிலையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக கிரிஷ் ஜோடன்கர் நியமிக்கப்பட்டார். அதிருப்தி மாவட்டத் தலைவர்கள் திரவியம், செங்கம் குமார், டீக்காராம் உட்பட 15 பேர், கடந்த 18ம் தேதி டில்லி சென்று, கிரிஷ் ஜோடன்கரை சந்தித்து பேசினர். அப்போது, 'மாவட்ட தலைவர்கள் நியமனத்தில், செல்வப்பெருந்தகை தன்னிச்சையாக செயல்படுகிறார்' என, நான்கு பக்க புகார் மனு அளித்தனர்.'சிறப்பாக செயல்படும் மாவட்ட தலைவர்களை மாற்ற மாட்டோம். மற்ற விவகாரங்களை, நான் இன்னும் நான்கு நாட்களில் சென்னைக்கு வந்ததும் பேசி முடிவெடுக்கலாம்' என கூறி, அவர்களை சென்னைக்கு செல்லும்படி கிரிஷ் அனுப்பியுள்ளார்.ஆனாலும், அவர்கள் டில்லியில் முகாமிட்டுள்ளனர். இன்னும் சில நாட்கள் தங்கியிருந்து காங்., கட்சியின் தலைவர்களான ராகுல், கார்கே, கே.சி.வேணுகோபாலை சந்தித்து விட்டு தான் சென்னை செல்வது என, பிடிவாதமாக உள்ளனர். - நமது நிருபர் -