அரியமங்கலம் : திருச்சி, அரியமங்கலம் அருகே கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. 43, ஆட்டோ டிரைவர். தாய் சாந்தி, 70, மனைவி விஜயலட்சுமி, 38, குழந்தைகள் பிரதீபா, 12, ஹரிணி, 10, ஆகியோருடன், சொந்த வீட்டில் வசித்தார்.மாரிமுத்துவின் தங்கை கணவர் சென்னையில் இறந்து விட்டதால், துக்க காரியத்துக்காக சென்ற அவர், அங்கேயே தங்கியிருந்தார். வீட்டில் தாய், மனைவி, குழந்தைகள் இருந்தனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு, நால்வரும் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டின் சிமென்ட் கூரை திடீரென இடிந்து நால்வர் மீதும் விழுந்தது. இதில், இடிபாடுகளில் புதைந்து நான்கு பேரும் இறந்தனர்.நேற்று அதிகாலை பக்கத்து வீட்டுப்பெண் ஒருவர் வீடு இடிந்து கிடப்பதை பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அரியமங்கலம் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன், இடிபாடுகளை அகற்றி, நான்கு பேரின் உடல்களையும் மீட்டனர்.