| ADDED : நவ 21, 2025 02:40 AM
ஓசூர், கர்நாடக மாநிலத்திலிருந்து இடம்பெயர்ந்த, 45க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் வனப்பகுதி வழியாக, கடந்த இரு தினங்களுக்கு முன், ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதிக்குள் நுழைந்தன. அவற்றை ஓசூர் வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை கெலமங்கலம்,- உத்தனப்பள்ளி சாலை மற்றும் ராயக்கோட்டை சாலையை கடக்க வைத்து, தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதிக்கு விரட்ட முயற்சி மேற்கொண்டனர். அப்போது, விருப்பாச்சி நகரில் கூடிய அப்பகுதி விவசாயிகள், யானைகளை தங்கள் பகுதிக்குள் வராதவாறு, சாலையை கடக்க விடாமல் குறுக்கிட்டு, இரவு முழுவதும் காவல் காத்தனர். இதனால் யானைகளை விரட்டும் பணியில் தோய்வு ஏற்பட்டதில், யானைகள் மீண்டும், ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கே திரும்பின. மேலும், காலேப்பள்ளி, காடுலக்கசந்திரம் பகுதியிலிருந்த யானைகளும் இணைந்து, ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு சென்றன. இதனால் வனத்துறையினர், வனப்பகுதியை ஒட்டிய பகுதி விவசாயிகள், தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்து, யானைகளை விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.