சென்னை: 'தமிழகத்தில் 200 நாட்களில், 595 கொலைகள் நடந்துள்ளன. இந்த ஆட்சியில் தமிழகமே கொலைக்களமாக மாறியுள்ளது. கொலைகாரர்களிடம் இருந்து, மக்களை காப்பாற்ற, போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.முன்பெல்லாம், ஆதாய நோக்கம் அல்லது பழிக்குப் பழி போன்ற காரணங்களால் கொலை நடப்பது சகஜமாக இருந்தது. அந்த நிலை மாறி, அரசியல்வாதிகளை பட்டப்பகலில் கூலிப்படை அனுப்பி தீர்த்துக் கட்டும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z0ngt1k1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கட்சியினரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ள இந்த சூழல் பற்றி, தமிழக அரசை அ.தி.மு.க., எச்சரித்துள்ளது. வெறியாட்டம்
இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:கடந்த மூன்று ஆண்டுகளாக தி.மு.க., ஆட்சியில் நடக்கும் சமூக விரோத செயல்களை சுட்டிக்காட்டி வருகிறோம். ஆனால், தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்று மட்டுமே முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்கிறார். தமிழகத்தில் காவல் துறை சுதந்திரமாக செயல்படவில்லை. இதை திரும்பத் திரும்ப சுட்டிக் காட்டியும், காவல் துறைக்கு பொறுப்பான முதல்வர் கண்டுகொள்ளவே இல்லை.காவல்துறை சுயமாக செயல்பட அனுமதிக்கவில்லை. இது தினமும் நடக்கும் கொலைகள் வழியாக நிரூபணமாகிறது. எந்த ஆட்சி நடந்தாலும், ஒரு சில கொலைகள் நடப்பது இயல்பு. ஆனால், இந்த ஆட்சியில், கொலை செய்வதையே சிலர் தொழிலாக வைத்துள்ளதை காண்கிறோம். அவர்கள் தமிழகம் முழுதும் சுற்றி வந்து வெறியாட்டம் ஆடுகின்றனர். ஏராளமான கொலைகள் நடப்பதால், கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறுகின்றனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில், சிலர் தானாக முன்வந்து சரணடைந்தனர். அதில் ஒருவரை, சென்னை மாநகர் போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயகுமார்; சேலம் மாநகர் அ.தி.மு.க., பகுதி செயலர் சண்முகம்; மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் படுகொலை என, கட்சி பேதமின்றி, படுகொலைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. முதல் இடம்
ஜனவரி மாதத்தில் 80, பிப்ரவரி 64, மார்ச் 53, ஏப்ரல் 76, மே 130, ஜூன் 107, ஜூலை 17 வரை 88 என, தமிழகம் முழுதும் கடந்த 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளன. சென்னை மாநகரம் 86 கொலைகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. மதுரை 40 கொலைகளுடன் இரண்டாமிடம்; துாத்துக்குடி மாவட்டம் 35 கொலைகள்; விருதுநகரில் 31 கொலைகள். இவற்றில் ஒரு சில கொலைகளை தவிர, ஏனைய குற்றங்களில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை; இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த ஆட்சியில் தமிழகமே கொலைக்களமாக மாறியுள்ளது. மக்கள் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் வாழ்வது, அபாயகரமான ஒன்றாகும்.அடுத்தவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்ற இறுமாப்போடு இனியும் செயல்படாமல், சுய சிந்தனையோடு கொலை பாதகர்களிடம் இருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து, போர்க்கால அடிப்படையில், அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.