பள்ளிகள் நிர்வாகத்தில் எக்கச்சக்க குளறுபடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை:'அடுத்த கல்வியாண்டில், 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து, அந்தப் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை, அருகில் உள்ள தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.இதன் நோக்கம், படிப்படியாக அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார் மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை, மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும்.அரசுப் பள்ளிகள் தனியார் மயமாக்கப்பட்டால், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். இதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.தமிழகத்தில், 58,000க்கும் அதிகமான பள்ளிகள் உள்ளன; அரசு பள்ளிகள், 37,579; அரசு உதவி பெறும் பள்ளிகள் 8,328. இவற்றில், 46 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.ஆனால், குறைந்த அளவு இயங்கும், 12,000 தனியார் பள்ளிகளில், 65 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை விட, தனியார் பள்ளிகளில் அதிகம் பணிபுரிகின்றனர்.அரசு பள்ளிகள் 2,500ல் கழிப்பறை வசதி இல்லை என, ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆரம்பப் பள்ளிகள் இடைநிற்றல் 16 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சூழ்நிலையில், அரசு பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்தி, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக, அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தத்து கொடுக்க முனைவது, ஏழை, உழைப்பாளி மக்கள் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயலாகும்.பல தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளே கிடையாது. அரசுப் பள்ளிகளுக்கு செலவிடாமல், தமிழக அரசு அதிலிருந்து தப்பிப்பது, நிதி சுமையை காரணம் காட்டி, தனியாருக்கு தத்துக் கொடுப்பது, முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையாகும்.அரசுப் பள்ளிகளை, தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 500 பள்ளிகளை தத்து கொடுக்கும் நடவடிக்கையை, தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அரசுப் பள்ளிகளை மேம்படுத்த, அரசே அதற்கான கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். ஆசிரியர் காலியிடங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.