உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சரக்கு வாகனங்களை ரயிலில் ஏற்றிச் செல்லும் சேவை; தென்காசி - கொல்லம் வழித்தடத்தில் அவசியத் தேவை போக்குவரத்தும் எளிது, செலவும் குறைவு...

சரக்கு வாகனங்களை ரயிலில் ஏற்றிச் செல்லும் சேவை; தென்காசி - கொல்லம் வழித்தடத்தில் அவசியத் தேவை போக்குவரத்தும் எளிது, செலவும் குறைவு...

மதுரை : தென்காசி - கொல்லம் வழித்தடத்தில் 'ரோல் ஆன் - ரோல் ஆப்' எனப்படும்சரக்கு வாகனங்களை ரயிலில் ஏற்றிச் செல்லும் 'ரோ - ரோ' சேவை அவசியத் தேவையாக உள்ளது.தமிழகம் - கேரளத்தை இணைக்கும் மதுரை திருமங்கலம் - கொல்லம், திருநெல்வேலி - கொல்லம் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான சரக்கு வாகனங்கள் செல்கின்றன.சென்னை, மதுரை, துாத்துக்குடியில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் செங்கோட்டை, புளியரை, தென்மலை, புனலுார் மலை பாதையை கடந்து கொல்லம், திருவனந்தபுரம் உட்பட கேரளத்தின் பகுதிகளுக்குச் நாள்முழுவதும் சென்று வருகின்றன.இத்தகைய பரபரப்பான மலைப்பாதையில் அதிக எடை லாரிகளை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன. தினமும் 800 லாரிகள் கடந்து செல்வதாகவும், 10க்கும் அதிகமான விபத்துகள் நடப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.கோவளம் அருகே விழிஞ்ஞம் பகுதியில் பெரும் கப்பல்களை கையாளும் துறைமுகம் அமைகிறது. துாத்துக்குடி, கொச்சி, விழிஞ்ஞம் துறைமுகங்களை மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்தின் கீழ் இணைக்கும் திட்டம் உள்ளதால் வரும் ஆண்டுகளில் இவ்வழித்தடத்தில் தற்போது இருப்பதைவிட பல மடங்கு சரக்குப் போக்குவரத்து அதிகரிக்கும்.இதற்கு தீர்வாக 'ரோ - ரோ' எனப்படும் பிரத்யேக சரக்கு ரயில் சேவை கைகொடுக்கும். பொதுவாக முனையங்களில் 'கிரேன்' உதவியுடன் சரக்குகள் கையாளப்படும். முனையங்களில் இருந்து சரக்குகளை லாரிகளில் கொண்டுவந்து ரயில்களில் ஏற்றி பின் லாரிகளில் இருப்பிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. மூன்று முறை சரக்குகள் கைமாற்றப்படுவதால் செலவு அதிகம்.ரோ - ரோ சேவையில் சரக்கு வாகனங்களையே ரயிலில் ஏற்றிச் செல்ல முடியும். ஓட்டுநர், உதவியாளர் உடன் பயணிக்கலாம். இதற்கென 60 மெட்ரிக் டன் வரை எடைகளை தாங்கும் பிரத்யேக 'வேகன்கள்' தயாரிக்கப்படுகின்றன. அதில் லாரிகளை ஏற்றி இறக்குவதற்கான வசதிகள் உள்ளன.இச்சேவை கொங்கன் ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டு மஹாராஷ்டிரா மாநிலம் கோலாட் - கோவா மாநிலம் வேர்ணா, வேர்ணா - கர்நாடக மாநிலம் சூரத்கல், கோலாட் - சூரத்கல் ஆகிய வழித்தடங்களில் நடைமுறையில் உள்ளது. தெற்கு ரயில்வே, மதுரை - விருதுநகர் - செங்கோட்டை - கொல்லம், துாத்துக்குடி - செங்கோட்டை - கொல்லம் ஆகிய வழித்தடங்களில் இச்சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்.இதனால் இவ்வழித்தடங்களில் லாரிகளின் இயக்கச் செலவு, பராமரிப்பு குறையும். எரிபொருள் மிச்சமாவதால் சுற்றுச் சூழல் பாதிப்பு குறைவதுடன் டோல்கேட்களில் லாரிகள் காத்திருப்பு நேரம் தவிர்க்கப்படும். போக்குவரத்து நெருக்கடி, விபத்துகள் குறையும்.சரக்கு லாரிகளை ஏற்றும் முனையங்களை மதுரை, விருதுநகர், ராஜபாளையம், செங்கோட்டை, துாத்துக்குடி, திருநெல்வேலியில் அமைக்கலாம். முனையங்களில் சரக்குகளை ஏற்றி இறக்க 15 - 20 நிமிடங்களே ஆகும் என்பதால் இச்சேவையில் சரக்குகளை கையாள்வதும் எளிது. ரோடு வழியாக செல்வதை விட ரயில் வழித்தடம் மூலம் விரைவாக சரக்குகளை அனுப்ப முடியும். பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நாட்டில் சரக்கு ரயில் இயக்குவதற்கான கட்டமைப்பிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்க தலைவர் சுகந்தம் ராமகிருஷ்ணன் கூறியதாவது:இரு மாநில சரக்கு பரிமாற்றங்கள், துறைமுகங்களை இணைக்கும் திட்டங்களால் குறுகிய துாரம் கொண்ட இவ்வழித்தடம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. முழுதும் மின்மயமாக்கப்பட்ட செங்கோட்டை - புனலுார் ரயில் பாதை இதுபோன்ற சரக்கு ரயில்களை இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயில் பெட்டிகளை கூடுதலாக இயக்கும் திறனிலும் இவ்வழித்தடம் மேம்பட்டுள்ளது. எனவே ரோ - ரோ வகை சரக்கு ரயில்களை இவ்வழித்தடத்தில் இயக்க தெற்கு ரயில்வே பரிசீலிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை