உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., உறுப்பினராக நடிகர் விஜய் அழைப்பு

த.வெ.க., உறுப்பினராக நடிகர் விஜய் அழைப்பு

சென்னை:'தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி பிடித்திருந்தால், கட்சியில் உறுப்பினராக இணையலாம்' என, அக்கட்சியின் தலைவரான, நடிகர் விஜய் கூறியுள்ளார்.நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில், அரசியல் கட்சி துவங்குவதாக பிப்., 2ம் தேதி அறிவித்தார். கட்சிக்கு இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. உறுப்பினர் அட்டையை எளிதாக பெற, மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியை, சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று விஜய் அறிமுகம் செய்தார். சமூக வலைதளங்களில் வழங்கப்பட்ட ரகசிய குறியீட்டை பயன்படுத்தி உள்நுழைந்து, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து, உறுப்பினர் அட்டையை, 'ஸ்மார்ட் கார்ட்' வடிவில் உடனுக்குடன் பெற வசதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, முதல் ஆளாக, தன் உறுப்பினர் அட்டையை விஜய் பெற்றார். அப்போது அவர் கூறியதாவது:மகளிர் அனைவருக்கும் என் அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள். இந்த நன்னாளில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் பெற்றுக்கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மக்கள் பணி செய்ய விரும்பினால், கட்சியின் உறுதிமொழியை படித்து விட்டு பிடித்திருந்தால், சுலபமான முறையில் உறுப்பினராகலாம். தமிழக மக்களின் வெற்றிக்கான என் பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைந்து எதிர்வரும் சட்டசபை தேர்தலில் சரித்திரம் படைப்போம்.இவ்வாறு நடிகர் விஜய் கூறினார்.

கட்சி உறுதிமொழிகள் என்ன?

நடிகர் விஜய் வெளியிட்டுள்ள த.வெ.க., உறுதிமொழி படிவத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்  நம் அன்னை தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மையின் மீதும் நம்பிக்கை வைத்து, அனைவரும் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணி காக்கும் பொறுப்புள்ள மனிதனாக செயல்படுவேன் மக்களாட்சி, மதசார்பின்மை, சமூகநீதி பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நல சேவகராக கடமை ஆற்றுவேன் ஜாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.இவ்வாறு படிவத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை