சமரச தீர்வு மையத்தில் நடிகர் ரவி, ஆர்த்தி ஆஜர்
சென்னை:சினிமா எடிட்டர் மோகனின் மகன் நடிகர் ஜெயம் ரவி. இவருக்கும், சீரியல் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்திக்கும், 2009ல் திருமணம் நடந்தது; இரண்டு மகன்கள் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக, இவர்கள் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி, ரவி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த, சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி, இருவருக்கும் இடையேயான குடும்ப பிரச்னை தொடர்பாக, சமரச தீர்வு மையத்தின் வாயிலாக பேச்சு நடத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று சமரச தீர்வு மையத்தில், ரவி, ஆர்த்தி ஆஜராகினர். இருவரிடம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக, மத்தியஸ்தர் பேச்சு நடத்தினார். பின், விசாரணை டிச., 7க்கு தள்ளிவைக்கப்பட்டது.