தேவையற்ற மரங்களை அகற்ற பட்ஜெட்டில் கூடுதல் நிதி; அரசுக்கு ஐகோர்ட் யோசனை
சென்னை : 'மற்ற மரங்களை வளர விடாமல் செய்யும், நம் மண்ணில் விதைக்கப்படும் ெவளிநாட்டு மரங்களை அகற்றுவதற்கு, பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தேவையற்ற தொல்லை தரும் மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் சீனிவாசன் ஆஜராகி, தேவையற்ற மரங்கள் அகற்றப்பட்டது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். அதை ஏற்ற நீதிபதிகள், 'தேவையற்ற மரங்களை அகற்ற, பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்குவது குறித்து, அரசு பரிசீலிக்க வேண்டும்' என்றனர். 'இ - பாஸ்'
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணியருக்கு, 'இ- - பாஸ்' வழங்கும் நடைமுறை கட்டாயப்படுத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'வாகனங்களின், 'நம்பர் பிளேட்'டுகளை தானியங்கி முறையில் அடையாளம் காணும் கருவி, வாகன சோதனை தடுப்புகள் உள்ளிட்டவற்றை அமைக்க, மூன்று மாதமாகும்' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, இவ்வசதிகளை ஏற்படுத்துவதன் வாயிலாக, ஊட்டி, கொடைக்கானலில் சட்டவிரோதமாக, 'ரிசார்ட்'கள் இல்லை என உறுதி செய்யப்படுவதுடன், கூடுதல் பசுமை வரி வசூல் போன்ற பலன்கள் கிடைக்கும் என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.