சென்னை : சென்னை மாநகருக்கு கூடுதல் குடிநீர் வழங்குவதற்காக நேமம், போரூர், அயனம்பாக்கம், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஆகிய, ஐந்து ஏரிகள் சீரமைக்கப்பட்டு, 1.12 டி.எம்.சி., கொள்ளளவு கூடுதலாக ஏற்படுத்தப்படுகிறது. சென்னை மாநகரில் நீர்த்தேக்கங்களின் தற்போதைய கொள்ளளவு, 1,851 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக, 4.2 டி.எம்.சி., உயர்த்தப்படும். தேர்வை கண்டிகை, திருக்கண்டலம் மற்றும் ராமஞ்சேரி ஆகிய இடங்களில், ஒவ்வொன்றும், 1 டி.எம்.சி., கொள்ளளவுள்ள புதிய நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படும்.
நேமம், போரூர், அயனம்பாக்கம், அம்பத்தூர், கொரட்டூர் மற்றும் மாதவரம் ஆகிய, ஆறு ஏரிகளை சீரமைப்பதன் மூலம், 0.9 டி.எம்.சி., மற்றும் சோழவரம் ஏரியை ஆழப்படுத்துவதன் மூலம், 0.3 டி.எம்.சி., கூடுதலாக கொள்ளளவு ஏற்படுத்தப்படும்.
முதல் கட்டமாக நேமம், போரூர், அயனம்பாக்கம், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஆகிய, ஐந்து ஏரிகள், 2001-2012ல், சீரமைக்கப்பட்டு 1.12 டி.எம்.சி., கூடுதலாக கொள்ளளவு ஏற்படுத்தப்படும். ஆந்திராவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் படி, இத்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும், 12 டி.எம்.சி., தண்ணீர் தமிழக எல்லையில் பெறப்பட வேண்டும்.
அதன்படி சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து பூண்டி நீர்த்தேக்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். இத்திட்டம் துவங்கிய, 1996 முதல் இதுவரை மொத்தம் 53.735 டி.எம்.சி., தண்ணீர் பெறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், 4.661 டி.எம்.சி., தண்ணீர் பெறப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், 3.375 டி.எம்.சி., தண்ணீர் பெறப்பட்டுள்ளது. இத்தகவல் பொதுப்பணித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.