சென்னை:அ.தி.மு.க., கொடி, சின்னம் பயன்படுத்தக் கூடாது என, முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உள்ளது.அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அ.தி.மு.க., கொடி, சின்னம், பெயரை பயன்படுத்தக் கூடாது எனவும், விசாரணை முடியும் வரை, இடைக்கால தடை விதிக்கவும் கோரியிருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.இதையடுத்து, பிரதான மனு நீதிபதி சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது.பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் ஆஜராகி, ''பன்னீர்செல்வம் பின்னால் தொண்டர்கள் ஏராளமாக இருப்பதால், அவருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை வீழ்த்த, கட்சி ஒன்றாக இருக்க, அவர் விரும்புகிறார்.''தொண்டர்களை சந்திக்க அவருக்கு சுதந்திரம் வேண்டும். சின்னம், கொடி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டால், தேர்தல் ஆணையத்தை அணுக முடியாத நிலை ஏற்படும்,'' என்றனர்.பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''கட்சியில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்கியது தவறு என்று, எந்த நீதிமன்றமும் கூறவில்லை. ஒருங்கிணைப்பாளர் என பன்னீர்செல்வம் தன்னை அழைத்துக் கொள்வதில், எங்களுக்கு ஆட்சேபனை இல்லை; அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளர் என அழைப்பதை தான் எதிர்க்கிறோம். வேறு கட்சி துவங்கி, தன்னை ஒருங்கிணைப்பாளர் என பன்னீர்செல்வம் அழைத்துக் கொள்ளட்டும்,'' என்றார்.இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதி சதீஷ்குமார் தள்ளிவைத்தார்.