உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க. - எம்.பி. சண்முகம் மீதான இரு வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு

அ.தி.மு.க. - எம்.பி. சண்முகம் மீதான இரு வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு

சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிரான நான்கு அவதுாறு வழக்குகளில், இரண்டு வழக்குகளை ரத்து செய்ய மறுத்தும், இரண்டு வழக்குகளை ரத்து செய்தும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை, 12 மணி நேர வேலை குறித்த அரசின் சட்டத்திருத்தம், வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேற்றம் குறித்து, அரசையும், முதல்வரையும் விமர்சித்து, முன்னாள் அமைச்சரும்,அ.தி.மு.க., ராஜ்யசபாஎம்.பி.,யுமான சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.அதனால், முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக, சண்முகத்துக்கு எதிராக நான்கு அவதுாறு வழக்குகளை, விழுப்புரம் நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில், சி.வி.சண்முகம் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தார்.மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:கள்ளச்சாராய விற்பனை, குடி மையங்கள் வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, கோடிக்கணக்கில் கொள்ளை அடித்திருப்பதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் பேசியுள்ளார், சண்முகம். முதல்வரின் பெயரை குறிப்பிட்டு பேசியுள்ளார்.சம்பந்தப்பட்ட துறையை அவர் வகிக்கவில்லை என்றாலும், முதல்வர் என்பதால் ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பாகிறார். இந்த அரசு, வெளிமாநில தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியது; ஸ்டாலின் அரசு ஏமாற்றும் அரசு என்றும் பேசியுள்ளார். இது அவதுாறானது மட்டுமல்ல, முதல்வர் அலுவலக செயல்பாடுகளை தொடர்புபடுத்துகிறது. எனவே, விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த இரண்டு வழக்குகளிலும் குறுக்கிட எந்த முகாந்திரமும் இல்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.மற்ற இரண்டு வழக்குகளை பொறுத்தவரை மனுதாரரின் பேச்சு என்பது, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்,அரசின் செயல்பாடுகளில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்துவது போன்றது.அவரது பேச்சு, அவதுாறாக இருப்பதாக யூகித்தாலும், முதல்வர் அலுவலக செயல்பாடுகளை நேரடியாக தொடர்புபடுத்துவதாக இல்லை. எனவே, அந்த வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன.ஜனநாயகத்தில், அரசின் மீது ஆக்கப்பூர்வ விமர்சனங்களை வைப்பது தான், எதிர்க்கட்சிகளின் பிரதான பணி. எனவே, எதிர்தரப்பினரின் குரல்வளையை நெரிக்கக் கூடாது.அதேநேரத்தில், எதிர்த்து குரல் கொடுக்கிறேன் என்ற பெயரில், மோசமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். வரம்பு மீறாமல், எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை