விழுப்புரம் -'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் போட்டி போட்டிருந்த நிலை மாறி, இப்போது, கடையை திறந்து வைத்துவிட்டு யாரும் வராமல் பழனிசாமி காத்திருக்கிறார்' என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்த ஓ.பி.எஸ்., அணி தொண்டர்களின் உரிமை மீட்புக் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., பேசியதாவது:எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும், அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டனாக இருப்பது நமக்கெல்லாம் பெருமை என்பதை உருவாக்கிக் கொடுத்தார்கள். அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்ய வேண்டும் என்ற உரிமையை உருவாக்கினார்கள்.ஆனால், பழனிசாமி அடிப்படை உரிமையை காலில் போட்டு மிதித்து, விதியை மீறி துரோகம் செய்துள்ளார்.இதனால் தொண்டர்கள், தமிழக மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். தொண்டர்களின் உரிமையை மீட்கவே தர்ம யுத்தத்தை துவக்கியுள்ளோம்.தங்கமணி, வேலுமணி, சண்முகம் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளனர். சாதாரண தொண்டன் கூட கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்க முடியும் என்கிற நிலை இன்றைக்கு மாறிவிட்டது.அ,.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் போட்டி போட்ட காலம் உண்டு. இப்போது, கடையை திறந்து வைத்துவிட்டு, கூட்டணி கட்சிகளுக்காக பழனிசாமி காத்துக் கொண்டிருக்கிறார்.வரும் லோக்சபா தேர்தலையொட்டி அணியை 88 மாவட்டங்களாக பிரித்து, அதற்கு மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சி செயலாளர் பதவிக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். விரைவில் பூத் கமிட்டி உறுப்பினர்களையும் நியமித்து, லோக்சபா தேர்தலை எதிர்கொள்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.