சென்னை:அ.தி.மு.க., கூட்டணியில், புரட்சி பாரதம் மற்றும் இந்திய தேசிய லீக் கட்சியுடன், நேற்று தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடந்தது.அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., - புதிய தமிழகம் - புரட்சி பாரதம் - இந்திய தேசிய லீக் - எஸ்.டி.பி.ஐ., கட்சிகள் சேருவது உறுதியாகி உள்ளது. தே.மு.தி.க., மற்றும் புதிய தமிழகம் கட்சியுடன் முதல் கட்ட பேச்சு முடிந்துள்ளது. நேற்று அ.தி.மு.க., அலுவலகத்தில், புரட்சி பாரதம் மற்றும் இந்திய தேசிய லீக் கட்சியினருடன், தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடந்தது.இந்திய தேசிய லீக் கட்சி செயல் தலைவர் நாகூர் ராஜா தலைமையில், ஐந்து பேர் குழுவினர், நேற்று காலை 11:30 மணிக்கு, அ.தி.மு.க., அலுவலகம் வந்தனர். அவர்களுடன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் பேசினர்.இந்திய தேசிய லீக் கட்சி சார்பில், அவர்கள் போட்டியிட விரும்பும் ஐந்து தொகுதிகள் அடங்கிய பட்டியல் வழங்கப்பட்டது. அதில், இரண்டு தொகுதிகளை ஒதுக்கும்படி கோரியுள்ளனர். அவற்றை கேட்ட, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், தங்கள் கட்சி பொதுச்செயலரிடம் பேசிவிட்டு, தகவல் தெரிவிப்பதாகக் கூறி அனுப்பினர்.அடுத்து புரட்சி பாரதம் கட்சியினருடன் பேச்சு நடந்தது. அவர்களும் போட்டியிட விரும்பும் தொகுதி பட்டியலை அளித்துள்ளனர். அவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. திருவள்ளூர் அல்லது விழுப்புரம் தொகுதியை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, புரட்சி பாரதம் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.