வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உனக்கு....
சென்னை: 'த.வெ.க., மாநாட்டில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜய்யின் அறிவிப்பில், அ.தி.மு.க.,வை முந்தி கொண்ட அவசரம் வெளிப்படுகிறது' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:
முதல் அடி மாநாடு, அடுத்த அடி ஆட்சி பீடம் என்பது அதீத வேட்கையையும், அசுர வேகத்தையும் கொண்டதாக இருக்கிறது. அது புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும். பெரும்பான்மை, சிறுபான்மை பெயரிலான பிளவுவாதத்தை ஏற்பதில்லை என்றும் விஜய் கூறுகிறார். இந்த நிலைப்பாடு, பா.ஜ., உள்ளிட்ட சங் பரிவார்களுக்கு எதிரானது போல தோற்றத்தை காட்டுகிறது.சிறுபான்மையினரின் வாழ்வுரிமை பாதுகாப்பு குறித்த அவரது நிலைப்பாடு என்ன என்பதுவும் கேள்விக்குறியாகிறது. அடுத்து, 'அவங்க பாசிசம்னா, நீங்க பாயாசமா' என, ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்.பாசிச எதிர்ப்பு என்பது பா.ஜ., - -சங்பரிவார் எதிர்ப்பு தான். இங்கே பாசிச எதிர்ப்பு என்பது தேவையற்றது என அவர் கருதுகிறாரா; இது என்ன நிலைப்பாடு'கூட்டணியில் இணைய வருவோருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்ற ஒரு புதிய நிலைப்பாட்டை, தமிழக அரசியல் களத்தில் முதன்முதலாக முன்மொழிந்துள்ளார். தி.மு.க., எதிர்ப்பும், தி.மு.க., கூட்டணியை பலவீனப்படுத்துதலுமே அவரது அதிதீவிர விழைவாகவும், வரலாற்று முன்மொழிவாகவும் உள்ளது.குடும்ப அரசியல் எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு போன்றவையும் பழைய முழக்கங்கள். புதிய செயல் திட்டங்களோ, அவற்றுக்கான புரட்சிகர முன்மொழிவுகளோ ஏதுமில்லை. பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வுக்கு முன்னர் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற அவசர கதியில் இப்படி அறிவித்து விட்டார்களோ என தோன்றுகிறது.ஒட்டுமொத்தத்தில், பல லட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பை போல, இந்த மாநாடு நடந்தேறியுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.