உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நோட்டீசுக்கு பதில் அளிக்க ஹாரிஸ் ஜெயராஜுக்கு அட்வைஸ்

நோட்டீசுக்கு பதில் அளிக்க ஹாரிஸ் ஜெயராஜுக்கு அட்வைஸ்

சென்னை:சேவை வரி விதிப்பு தொடர்பாக, ஜி.எஸ்.டி., இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கில், உரிய அதிகாரியிடம் ஆட்சேபனைகளை தெரிவிக்க, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.சினிமா இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனு:பதிப்புரிமை சட்டப்படி, இசையமைப்புக்கான முதல் உரிமையாளர் நான். என் இசை பணிகளுக்கான பதிப்புரிமையை, படத் தயாரிப்பாளர்களுக்கு வழங்கி விட்டேன். அதில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இசை பணிக்கான முழு பதிப்புரிமையும் நிரந்தரமாக தயாரிப்பாளர்களுக்கு சென்று விடும்.

வாக்குமூலம்

இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையை தொடர்ந்து, ஆவணங்களை அளிக்கும்படி சம்மன் அனுப்பினர். அனைத்து ஆவணங்களையும் அளித்தேன். என்னிடம் இருந்து வாக்குமூலம் பெற்றும் பதிவு செய்தனர். இதையடுத்து, சேவை வரி விதிப்பு தொடர்பாக, ஜி.எஸ்.டி., இணை இயக்குனர் நோட்டீஸ் அனுப்பினார். விற்பனையாகவோ, பரிசாகவோ, ஒரு பொருளின் அல்லது அசையா சொத்தின் உரிமையை மாற்றிவிட்டால், அது சேவையாகாது. அதன்படி, தயாரிப்பாளருக்கு முழு உரிமையும் அளித்து விட்டேன். எனவே, நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், சரவணன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:வேந்தர் மூவிஸ் தொடர்ந்த வழக்கில், இதுபோன்று அனுப்பப்பட்ட நோட்டீசை, உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பதாக, மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது; உரிய அதிகாரியை அணுகி, ஆட்சேபனை தெரிவிக்கலாம்; அதன்மீது அதிகாரி முடிவெடுக்க வேண்டும் என்று, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உத்தரவு

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் எழுப்பப்பட்டுள்ள அம்சங்களுக்கு, ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில் பதில் உள்ளது. எனவே, இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசுக்கு மனுதாரர் பதில் அளிக்கலாம். அதில், தன் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். அதன்மீது, உரிய அதிகாரி நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை