சென்னை: சட்டசபை தேர்தலுக்கு, தேர்தல் அறிக்கை தயாரிக்க, 10 பேர் கொண்ட குழுவை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அமைத்துள்ளார். அவரது அறிக்கை: தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், வரும் ஏப்ரலில் நடக்க உள்ளது. இத்தேர்தலுக்கு தேர்தல் அறிக்கை தயார் செய்ய, முன்னாள் அமைச்சர்களான கட்சியின் துணைப் பொதுச்செயலர் விஸ்வநாதன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் பொன்னையன், தேர்தல் பிரிவு செயலர் ஜெயராமன், அமைப்பு செயலர்கள் ஜெயகுமார், சண்முகம், செம்மலை, மணியன், மகளிர் அணிச் செயலர் வளர்மதி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், இலக்கிய அணிச் செயலர் வைகைச்செல்வன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பட்ட மக்களின் கருத்துக்களை பெற்று, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பர். இக்குழுவின் சுற்றுப்பயணத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி, கூட்டணி பேச்சு, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என, தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்க, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் கனிமொழி தலைமையில், 11 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.