| ADDED : ஜன 12, 2024 12:30 AM
மதுரை:மதுரை மாவட்டம், அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியின் போது வரவு - செலவு கணக்கை முறையாக பராமரித்து அரசிடம் ஒப்படைக்க கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:பொங்கலையொட்டி, அலங்காநல்லுாரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் சில ஆண்டுகளாக ஊழல், முறைகேடுகள் அதிகரித்துள்ளன; உச்சநீதிமன்ற உத்தரவுகள் மீறப்படுகின்றன. இரு ஆண்டுகளுக்கு முன் காளையை அடக்கிய வீரர்களுக்கு தங்க காசு வழங்கியதில் மோசடி நடந்தது.தங்க காசு, பரிசு பொருட்கள், பணத்தை விழாக் குழுவினர் வசூலிக்கின்றனர். கணக்கு விபரங்களை வருவாய் துறையினரிடம் சமர்ப்பிப்பதில்லை. வரவு - செலவு கணக்கை முறையாக பராமரிக்க, உத்தரவிடக் கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.அரசு மற்றும் விழாக் குழு தரப்பு: பணம் வசூலிக்கப்படுவதில்லை. எவ்வித புகாரும் இதுவரை வரவில்லை. கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் டோக்கன் வழங்கப்படும். அதன் விபரம் இ - மெயில் வாயிலாக தெரிவிக்கப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள்: நன்கொடையாளர்கள், காளைகளின் உரிமையாளர்கள் தரப்பில் இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.