ராஜ்யசபா சீட் பிரச்னைக்காக கூட்டணி மாறவில்லை: பிரேமலதா
காரைக்குடி: ''தமிழகத்திற்கு வட மாநிலத்தோர் வரலாம்; போகலாம். ஆனால், அவர்களுக்கு ஓட்டுரிமை என்பது வட மாநிலங்களில் தான் இருக்க வேண்டும்,'' என தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார். அவர் அளித்த பேட்டி : நடிகர் விஜயை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என சொல்லவில்லை. அதேபோல, நேற்று முளைத்த காளான்; ஒரு மழைக்குக்கூட தாங்காது என விஜய் குறித்து சொல்லவில்லை. ஏற்கனவே அரசியலில் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ஆகியோர் நிரூபித்தது போல், நடிகர் விஜயும் நிரூபிக்கட்டும். அதன் பின், அவரை ஏற்கலாம். அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தபோது, ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் உறுதி செய்தனர். ஆனால், எப்போது என குறிப்பிடவில்லை. ஆண்டை குறிப்பிடுங்கள் என கேட்டோம். ஆண்டை குறிப்பிடும் பழக்கம் எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்தே இல்லை; என் வார்த்தை தான் முக்கியம்; உறுதியாக சீட் தரப்படும் என்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார். 2025ல் சீட் கொடுக்கவில்லை. கேட்டதும், 2026 என்று தெரிவித்துள்ளார். இந்த குழப்பத்தால், கூட்டணி மாறுகிறோம் என்பது அர்த்தமல்ல. பழனிசாமி முதுகில் குத்தவில்லை. மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் மாநில அரசு திட்டங்களை நிறைவேற்ற முடியாது. அதனால் மத்திய, மாநில அரசுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். பீஹார் தேர்தல் முடிவு போலத்தான், தமிழக சட்டசபைத் தேர்தலிலும் முடிவுகள் அமையும் என கூற முடியாது. தமிழகத்திற்கு வட மாநிலத்தோர் வரலாம்; போகலாம். ஆனால், அவர்களுக்கு ஓட்டுரிமை என்பது வட மாநிலங்களில் தான் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.