உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க.,வில் இருந்து அன்புமணி வெளியேற்றம்?

பா.ம.க.,வில் இருந்து அன்புமணி வெளியேற்றம்?

சென்னை : பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையிலான மோதல் முற்றியுள்ளது. மகனுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிய ராமதாஸ், கட்சியில் இருந்து அவரை வெளியேற்ற பொதுக்குழுவை கூட்டப் போவதாக தெரிவித்துள்ளார்.ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையிலான கருத்து வேறுபாடு நேற்று பகிரங்கமாக வெடித்தது. ''பா.ம.க., எனும் அழகான கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டார்; 45 ஆண்டுகளாக கட்டிக்காத்த கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டார்; வளர்த்த கிடா என் மார்பில் பாய்ந்து விட்டது,'' என, அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார் ராமதாஸ்.

சத்தியத்தை மீறி

திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி, 'நான் என்ன குற்றம் செய்தேன்; ஏன் இந்த பதவி நீக்கம்?' என கேட்டிருக்கிறார். இது முழுக்க முழுக்க மக்களையும், பா.ம.க.,வினரையும் திசை திருப்பும் முயற்சி. என்ன தவறு செய்தேன் என கேள்வி கேட்டு, என்னை குற்றவாளியாக சித்தரித்து, அனுதாபம் பெற முயற்சிக்கிறார்.தவறு செய்தது அன்புமணி அல்ல. குடும்பத்தில் யாரும் அரச பதவி ஏற்க மாட்டோம் என்ற என் சத்தியத்தை மீறி, 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி, நான் தான் தவறு செய்து விட்டேன். தவறான ஆட்டத்தை ஆரம்பித்து, முதலில் அடித்து ஆட ஆரம்பித்தது அன்புமணிதான். புதுச்சேரி பொதுக்குழுவில், மேடை நாகரிகத்தை கடைப்பிடிக்காமல், அநாகரிகமாக அன்புமணி நடந்து கொண்டார். இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்தேன். அதற்கு மேடையிலேயே மறுப்பு தெரிவித்தது தவறான செயல். மேடையில் உட்கார்ந்து காலாட்டி கொண்டிருந்ததும், 'மைக்'கை துாக்கி என் தலையில் போடாத குறையாக, டேபிளில் வீசியதும் சரியல்ல.

களங்கம்

பனையூரில் அலுவலகம் திறந்துள்ளேன்; அங்கு வந்து என்னை சந்தியுங்கள் என நிர்வாகிகளிடம் தொலைபேசி எண் கொடுத்தார். நான்கு சுவருக்குள் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை நடு வீதிக்கு கொண்டு வந்தார்.பா.ம.க., எனும் அழகான ஆளுயர கண்ணாடியை, ஒரு நொடியில் உடைத்து நொறுக்கினார். கட்சியை 45 ஆண்டுகளாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு நடத்தி வந்தேன். அதற்கு அன்புமணி களங்கம் ஏற்படுத்தி விட்டார். வளர்த்த கிடாவே என் மார்பில் பாய்ந்துள்ளது. நிலைகுலைந்து விட்டேன்.கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து, பல தவறுகளை அன்புமணி செய்தார். ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் கட்சி பதவிக்கு வர தடையாக இருந்தார். முகுந்தன் நியமனம் பற்றி பேச்சு வந்தபோது, பெற்ற தாய் மீது பாட்டிலை துாக்கி வீசினார் அன்புமணி. அவருக்கு தலைமைப் பண்பு அறவே இல்லை. காடுவெட்டி குருவை கீழ்த்தரமாக நடத்தினார்.நான் தைலாபுரம் தோட்டத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்; யாரையும் சந்திக்கக் கூடாது என, அன்புமணி நினைக்கிறார். அவர் கூசாமல் பொய் சொல்பவர். 108 மாவட்ட செயலர்களுக்கு அவரே போன் செய்து, 'என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்கப் போகிறார். எனவே, கூட்டத்திற்கு போக வேண்டாம்' என கூறியுள்ளார். நான் ஆள் வைத்து அடிக்கப் போவதாகவும் சொல்லியிருக்கிறார்.லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி வேண்டும் என்றார் அன்புமணி. நான் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறினேன். அதுதான் இயற்கையான கூட்டணி. அது அமைந்திருந்தால் பா.ம.க., குறைந்தது மூன்று இடங்களிலும், அ.தி.மு.க., 6 அல்லது 7 இடங்களிலும் வென்றிருக்கும். ஆனால், பா.ஜ., கூட்டணிக்காக அன்புமணியும், சவுமியாவும் என் கால்களை பிடித்து அழுதனர். பா.ஜ., கூட்டணிக்கான ஏற்பாட்டை அண்ணாமலை தூண்டுதலால் சவுமியா செய்தார். கட்சிக்கு இவ்வளவு பாதகம் செய்த அன்புமணியை, பொதுக்குழு கூட்டி நீக்கவும் தயாராகி விட்டேன். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

முகுந்தன் ராஜினாமா!

பா.ம.க., இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து, ராமதாஸ் மூத்த மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமன் ராஜினாமா செய்துள்ளார். அன்புமணிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், 'சொந்த காரணங்களுக்காக விலகுகிறேன். ராமதாஸ் எங்களின் குல தெய்வம். அன்புமணி எங்களின் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சி பணியாற்றுவேன்' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

தாமரை மலர்கிறது
மே 31, 2025 00:18

சாதிவெறியை தூண்டிவிட்டு லாபம் பார்த்தவர் ராமதாஸ். இவரை நம்பி பல அப்பாவி வன்னிய இளைஞர்கள் பலிகடா ஆனார்கள். செய்த பாவத்திற்கு இப்போது மகன் காரியம் செய்கிறார்.


Natarajan Ramanathan
மே 30, 2025 20:49

குடும்பத்தில் யாரும் அரச பதவி ஏற்க மாட்டோம் என்ற தனது சத்தியத்தை மீறி, 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்து விட்டதாக ஒத்துக்கொள்ளும் ராமதாஸ் பிறகு ஏன் தனது பேரன் முகுந்தனை கட்சி பதவியில் அமர்த்துகிறார்?


Rajan
மே 30, 2025 18:32

இது ஒரு ஐடியாதான். ராமதாஸ் திமுகவுடன் கூட்டு சேர்ந்தால் என்ன ஆதாயம் கிடைக்கும் என்று பார்ப்பார். அவர் மகன் அதிமுகவிடம் சேர்ந்தால் என்ன கிடைக்கும் என்று பார்ப்பார். எதில் அதிக ஆதாயம் இருக்குறதோ அங்கே போவார்கள். இது அனைத்தும் பேசி வைத்த நாடகம்


Muralidharan S
மே 30, 2025 15:16

திராவிஷ கட்சிகளும், குடும்ப கட்சிகளும், ஜாதி கட்சிகளும் தமிழ்நாட்டின் சாபக்கேடுகள்.. இவை ஒழிந்தால்தான் தமிழகம் உருப்படும்.


R.P.Anand
மே 30, 2025 13:07

அன்பு மணி இப்போது காலத்தில் இறங்கி கட்சியை கைபற்றி நல்லது


Vijay D Ratnam
மே 30, 2025 13:06

இந்த தேசத்தை பிடித்த தொழுநோய் தொற்றுநோய் இந்த நாற்றம் பிடித்த வாரிசு அரசியல், குடும்ப அரசியல். இந்த பச்சை அயோக்கியத்தனத்தை டெல்லி நேரு குடும்பம் தொடங்கி வைத்தது.


RAMAKRISHNAN NATESAN
மே 30, 2025 12:10

மு க அழகிரியும் மு க ஸ்டாலினும் கூட இனி கைகோர்ப்பார்கள் .... இவாயர்கள் மக்கள்தான் .......


malar mannan
மே 30, 2025 11:30

அன்புமணி ,ராமதாசுக்கு சரியான வம்புமணி.


kumar
மே 30, 2025 11:12

அன்புமணி பாஜகவிற்கு சென்று விடலாம்...அன்புமணி திராவிட கட்சிகளுக்கு மாற்றாக கட்சியை வளர்க்க ஆசைப்படுகிறார்.. ராமதாஸ் இரண்டு திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்ய நினைக்கிறார்..


venugopal s
மே 30, 2025 10:37

தந்தையின் பாட்டாளி மக்கள் கட்சிக்கு போட்டியாக மகன் கூட்டாளி மக்கள் கட்சி தொடங்குவாரா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை