| ADDED : மார் 19, 2024 04:09 AM
சென்னை, : கிராமப்புறங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடைகள், மதிய உணவு சமையல் அறை போன்ற கட்டடங்களை பராமரிக்கும் பொறுப்பை, உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டம் கடந்த மாதம் நடந்தது. இக்கூட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடைகள், மதிய உணவு சமையல் அறை கட்டடங்கள் பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.இக்கட்டடங்கள் அனைத்தும், பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்படுகின்றன. பணிகள் முடிந்த பின், கட்டடம் குறிப்பிட்ட துறையால் பராமரிக்கப்படுவதில்லை. ஏனெனில், பராமரிப்புக்கு என தனியே நிதி ஒதுக்கப்படுவதில்லை. எனவே, இக்கட்டடங்களை உள்ளாட்சி அமைப்புகள், அவற்றின் பொது நிதி, மாநில நிதிக்குழு, 15வது நிதி ஆணையம், கல்வி நிதி போன்றவற்றை பயன்படுத்தி பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித் துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.