உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ம.தி.மு.க.,வில் இருந்து மல்லை சத்யா நீக்கம்; வைகோவுக்கு விருது வழங்குவதாக அறிவிப்பு

ம.தி.மு.க.,வில் இருந்து மல்லை சத்யா நீக்கம்; வைகோவுக்கு விருது வழங்குவதாக அறிவிப்பு

சென்னை : ம.தி.மு.க.,வில் இருந்து, மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். ம.தி.மு.க.,வில் முதன்மை செயலர் துரை, துணை பொதுச்செயலர் மல்லை சத்யா இடையே மோதல் நீடித்த நிலையில், 'சத்யா தனக்கு துரோகம் இழைத்து விட்டார்' என, பொதுச்செயலர் வைகோ குற்றஞ்சாட்டினார். உடனே, வைகோவுக்கு எதிராக, சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை சத்யா நடத்தினார். இதையடுத்து, மல்லை சத்யா ம.தி.மு.க.,வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதோடு, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு சத்யா பதில் அளித்த நிலையில், அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ நேற்று அறிவித்தார். வைகோ அறிக்கையில், 'கட்சியில் இருந்து நிரந்தரமாக ஏன் நீக்கக்கூடாது என சத்யாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர் அளித்த பதிலை, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஆய்வு செய்தது. அவரது பதில், முற்றிலுமாக ஏற்கத்தக்கதல்ல என தெரியவந்தது. 'அவர் மீதான குற்றச்சாட்டுகளும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் உறுதியானது. எனவே, மல்லை சத்யாவை, துணை பொதுச்செயலர் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து நிரந்தரமாக நீக்குகிறேன்' என கூறியுள்ளார். இதற்கிடையே, காஞ்சிபுரத்தில் இருந்த சத்யா, தன்னை கட்சியில் இருந்து நீக்கியதை, நேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

பின்னர், அவர் கூறியதாவது:

ம.தி.மு.க.,வில், 32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிஞ்சி விட்டு, சக்கையாக துாக்கி எறிந்து விட்டனர். ம.தி.மு.க., இன்று, 'மகன் தி.மு.க.,' ஆகிவிட்டது. நான் அளித்த விளக்கத்தை ஒழுங்கு நடவடிக்கை குழு ஆய்வு செய்ததாக வைகோ கூறுகிறார். ஆனால், ம.தி.மு.க.,வில் ஒழுங்கு நடவடிக்கை குழு என்ற குழுவே கிடையாது. முதல்வர் ஸ்டாலின், வெளிநாடு சென்று திரும்பிய நாளில், என்னை கட்சியிலிருந்து நீக்கி, அந்த செய்தியை பெரிதாக்கி, முதல்வர் பற்றிய செய்திகளை வைகோ மழுங்கடித்துள்ளார். தி.மு.க.,வில் இருந்து வைகோ வெளியேறிய போது, தி.மு.க.,வையும், அறிவாலயத்தையும் சொந்தம் கொண்டாடினார். நாங்கள் அதுபோல் செய்ய மாட்டோம். காஞ்சிபுரத்தில், செப்., 15ல் முப்பெரும் விழா நடத்துகிறோம். புதிய கட்சி துவங்குவது பற்றிய கேள்விக்கு, அந்த விழாவில் பதில் கிடைக்கும். முப்பெரும் விழாவில் வைகோவுக்கும் விருது வழங்க உள்ளோம்; அவர் வருவார் என நம்புகிறோம். இவ்வாறு சத்யா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை