உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்டோவில் செல்ல செயலி; 1.5 கி.மீ.,க்கு ரூ.50 கட்டணம்?

ஆட்டோவில் செல்ல செயலி; 1.5 கி.மீ.,க்கு ரூ.50 கட்டணம்?

சென்னை: ''ஆட்டோக்களுக்கான புதிய கட்டணம் மற்றும் செயலி, விரைவில் பயன்பாட்டுக்கு வரும்,'' என, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.சென்னை, கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில், ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர்கள் சங்கத்தினருடன், போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார். போக்குவரத்து ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு, இணை ஆணையர் பொன் செந்தில்நாதன், தொ.மு.ச., தலைவர் நடராஜன், சி.ஐ.டி.யு., ஆட்டோ சங்க செயல் தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட, 25 சங்கங்களின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில், 'முதல் 1.5 கி.மீ.,-க்கு 50 ரூபாய், அடுத்தடுத்த ஒவ்வொரு கி.மீ-.,க்கும் 25- ரூபாய் என, ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும்' என, தொழிற்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி: சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமமான, 'கும்டா' வாயிலாக, வாடகை வாகனங்களுக்கான செயலியை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ கட்டண மாற்றம் தொடர்பாக, முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு விதிகளை பரிசீலித்து, 'பைக் டாக்சி'கள் வரன்முறைப்படுத்தப்படும். வாடகை வாகனத்துக்கான மஞ்சள் நிற நம்பர் பிளேட் பொருத்தி, 'பைக் டாக்சி' இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.தொ.மு.ச., பேரவை தலைவர் நடராஜன் கூறுகையில், ''ஆட்டோ கட்டணத்தை மறுசீரமைக்க வேண்டும். வாடகை வாகன முன்பதிவுக்கான செயலியை, அரசு உருவாக்க வேண்டும். பைக் டாக்சியை வரைமுறைப்படுத்த வேண்டும். ''இதை விரைவாக செய்ய வேண்டும். திருத்தப்பட்ட மோட்டார் வாகன விதிகளில், கட்டண நிர்ணயத்துக்கு மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வலியுறுத்தியுள்ளோம்,'' என்றார்.தமிழக ஆட்டோ கால்டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜாஹிர் உசேன் கூறுகையில், ''ஆட்டோ மீட்டர் கட்டணம் குறித்து, முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்று, வெகு விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என, அமைச்சர் உத்தரவாதம் அளித்துள்ளார். ''இதுபோல, மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது கூட்டம் நடத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R S BALA
பிப் 19, 2025 07:44

எந்த கட்டணம் நிர்ணயம் பண்ணாலும் அதனை பின்பற்றப்போவது கிடையாது.. வருடத்தில் 100 ஆட்டோ பயணம் மேற்கொண்டால் 90 பயணம் கட்டணத்திலும் மனதளவிலும் கடும் பாதிப்பைத்தான் உணர்ந்திருப்பார்கள் பயணம் செய்வோர், இதில் நடுவழியில் இறக்கிவிடப்பட்ட அனுபவம் ஏராளம் உண்டு சென்னையில்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை