| ADDED : ஆக 05, 2011 12:47 AM
பெருந்துறை : ''ராஜாவை கைது செய்ததன் மூலம், முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையால் நிம்மதி பிறந்துள்ளது,'' என, ஆள் கடத்தலால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணி கூறினார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த பழனிச்சாமி மற்றும் குடும்பத்தினர், நிலம் தொடர்பான பிரச்னையில் கடத்தப்பட்டனர். அவர்களது விளைநிலம், வீடு ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்திய இவ்வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் புகார்தாரரான பழனிச்சாமியின் மைத்துனர் சுப்பிரமணி, தற்போது நடந்துள்ள ராஜா கைது பற்றி கூறியதாவது: என் மைத்துனர் குகமணி, அவரது அண்ணன் பழனிசாமி ஆகியோரது நிலத்தை மோசடியாக முன்னாள் அமைச்சர் ராஜா அபகரித்தபோது, ஆதாரத்துடன் போலீசில் புகார் கூறினோம். அப்போது ஆளும் கட்சியான தி.மு.க.., அமைச்சர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அன்றைய முதல்வர் கருணாநிதி, 'இவ்வழக்கில் ராஜா மீது முகாந்திரம் உள்ளது' என்று கூறியும், சரியான நடவடிக்கையில்லை. தற்போது, மற்றொரு நில மோசடி வழக்கில் ராஜா கைதானது காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், அதை இன்றைய முதல்வர் ஜெயலலிதா செய்துள்ளது மனதுக்கு நிம்மதி அளிக்கிறது. இவ்வாறு ராஜா கூறினார்.