சபரிமலை சீசனை முன்னிட்டு புனலுார் சிறப்பு ரயில் தேவை அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்துார் : சபரிமலை அய்யப்பன் கோவில் கார்த்திகை மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு மதுரையில் இருந்து புனலுார் சென்று திரும்பும் வகையில் தினமும் சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அய்யப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் மதுரை மீனாட்சி அம்மன், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், குற்றாலம், அச்சன் கோவில், ஆரியங்காவு, குளத்துபுழா அய்யப்பன் கோவில்களில் தரிசனம் செய்து விட்டு சபரிமலை சென்று திரும்புவது வழக்கம். இதில் மதுரை, ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக செல்லும்போது தான், அய்யப்பன் படைவீடு கோவில்களுக்கு செல்ல முடியும் என்பதால், மற்ற வழிகளை விட இந்த வழித்தடத்தில் மிகவும் அதிகமாக பக்தர்கள் வருகின்றனர்.இவ்வாறு வரும் அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக மதுரையில் இருந்து விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், தென்காசி ஆரியங்காவு, தென்மலை வழியாக புனலுார் வரை சென்று திரும்பும் வகையில், மதுரையில் இருந்து தினமும் காலை, மாலை 6:00 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.