உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வுடன் பேரம்: ரூ.100 கோடி கேட்டது யார்?

அ.தி.மு.க.,வுடன் பேரம்: ரூ.100 கோடி கேட்டது யார்?

திருச்சி : ''அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.100 கோடி கேட்டு பேரம் பேசுகின்றனர்,'' என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். திருச்சியில் அ.தி.மு.க., மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களின் கள ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா ஆகியோருடன் திருச்சி மாவட்ட அ.தி.மு.க., செயலர்கள் கலந்து கொண்டனர்.

தெய்வாதீனம்

கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தமிழக முதல்வராக பதவி ஏற்க இருந்தார். அந்த சூழலில் தான், தெய்வாதீனமாக பழனிசாமி முதல்வரானார். இல்லையென்றால், தமிழகம் என்ன ஆகி இருக்கும் என்றே தெரியாது. வரும் 2026ல் அ.தி.மு.க.,வை பழனிசாமி அழித்து விடுவார் என, தினகரன் கூறி வருகிறார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோர் அரசியலில் செல்லாக்காசு ஆகி விட்டனர். அவர்களை அ.தி.மு.க.,வினர் புறம் தள்ள வேண்டும். முதல்வர் பதவிக்குரிய கவுரவத்தையெல்லாம் குறைத்துக் கொண்டு ஸ்டாலின் பேசி வருகிறார். லஞ்சம் - ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, ரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சர்வாதிகாரி போல் ஸ்டாலின் நடக்கிறார். 'கூட்டணி குறித்து யாரும் எதுவும் பொது வெளியில் பேச வேண்டாம்; அதெல்லாம் என் பொறுப்பு. நான் பார்த்துக் கொள்கிறேன்' என பழனிசாமி கூறியுள்ளார். அதனால், நான் கூட்டணி குறித்து அதிகம் பேசுவதில்லை. இருந்தாலும், சில விஷயங்களைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அ.தி.மு.க.,வுடன் கூட்டணியாக வருகிறேன் என்று பேச்சு நடத்தவரும் கட்சிகள், எடுத்ததுமே 20 'சீட்' வேண்டும் என்று கேட்கின்றனர். கூடவே, 50லிருந்து 100 கோடி ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டு பேரம் பேசுகின்றனர். இவ்வளவு பணத்துக்கெல்லாம் எங்கே செல்வது? ஸ்டாலின் கொள்ளை அடித்து வைத்துள்ளார். அவரைக் கேட்டால், உடனே கொடுப்பார். பணத்துக்காக யார் அங்கு சென்றாலும், ஜெயிக்க முடியாது. பழனிசாமி தான் வெற்றி பெறுவார்.

வருத்தம்

நிருபர்கள் என்னிடம் பேட்டி கேட்டால் கொடுப்பதில்லை. அதற்கு காரணம் -- பழனிசாமி. பேட்டியில் யாரையாவது திட்டி இருப்பேன். அதற்கு முந்தைய நாள் தான், அவர்களைப் போய் பார்த்து பேசிவிட்டு திரும்பி இருப்பார் பழனிசாமி. என் பேட்டியைப் பார்த்து விட்டு, பழனிசாமியை அழைத்து அவர்கள் வருத்தத்துடன் பேசி உள்ளனர். இது பலமுறை நடந்ததால், 'இனி நீங்கள் யாருக்கும் பேட்டி கொடுக்க வேண்டாம்' என பழனிசாமி தடை போட்டுள்ளார். அதனால், பத்திரிகையாளர்களிடம் நான் பேசுவதில்லை. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

கருத்து வேறுபாட்டால் தோல்வி!

திருச்சி மாவட்ட அ.தி.மு.க.,வில் கோஷ்டிகள் பூசல்கள் நிறைய உள்ளன. ஒருவருக்கு பதவி கொடுத்தால், கிடைக்காதவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்கின்றனர். கட்சியினருக்குள் ஒற்றுமை இல்லை. இப்படியே போனால், அ.தி.மு.க., எதிர்கட்சியாகத்தான் இருக்கும். வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாமல் இருக்கும் இறந்தவர்கள் பெயர்களை வைத்து, தி.மு.க., கள்ள ஓட்டுப் போடும். அதனால், வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் பெயரை நீக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளாலேயே, கடந்த தேர்தல்களில் வெற்றி வாய்ப்பு பறிபோனது. ---தங்கமணி, முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Bala
நவ 21, 2024 20:46

ஜெயலலிதா சத்யாகிரஹம் செய்துவிட்டு ஜெயிலுக்கு போனாரா ? அவரும் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்து விட்டு ஜெயிலுக்கு போனார்.


Ganapathy Subramanian
நவ 20, 2024 10:41

குருமா கட்சியைத்தான் குறிப்பிட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன். சிறுத்தைகள்தான் காசுக்கு நாக்கை தொங்கப்போட்டு அலைகின்றனர். அதை முதல்வர் நன்றாகவே புரிந்துகொண்டு வைத்துள்ளார்.


M Ramachandran
நவ 20, 2024 10:37

பழனியிடம் சசிகாலவிடமிருந்து பதுக்கிய பணம் மூட்டை யாய் இருப்பது தெரிந்து கொண்டு தான் கேட்கின்றனர். அவரும் வேறு வழியில்லாமல் கடைசி நேரத்தில் கொடுத்து விடுவார். ஏன் என்றால் மானம் பறி போய் விட கூடாது கட்சி பிரமுகர்களுக்கு ஜால்ராக்களுக்கு டெபாசிட் பணமாவது திரும்ப வேனுமெ என்ற எண்ணத்தில்


duruvasar
நவ 20, 2024 09:22

இவர்கள் இன்று இருக்கும் நிலைமையில் தொடர்ந்து எதிர் கட்சி வரிசையால் தான் உட்காரவேண்டும் என பேசுவதெல்லாம் கொஞ்சம் ஓவராக தெரியவில்லலையா ? ஆசை படுவதற்கு ஒரு அளவே இல்லையா ?


P Karthikeyan
நவ 20, 2024 08:33

பொன்மனச்செம்மல் கண்டெடுத்த கட்சியை அழிக்க ஜெயக்குமார் ஒருத்தர் போதும் ...துணைக்கு திண்டுக்கல் சீனிவாசன் ..எடப்பாடிகிட்ட காசு இல்லியா ..எந்த ஊரு பொய் இது


VENKATASUBRAMANIAN
நவ 20, 2024 07:54

அதிமுகவின் அழிவு இவர்களால் தான். வேறு யாருமே தேவையில்லை.


Kalyanaraman
நவ 20, 2024 07:44

வலிமையான கூட்டணி இல்லையெனில் இந்த முறை எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்து மூன்றாவது நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு விடும். அதிமுகவை வலிமையாக்குவதும் கேள்விக்குறியாக்குவதும் பழனிச்சாமி கையில் தான் உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை