சென்னை : லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சட்ட விரோத மது விற்பனையை தடுக்க, மதுக்கூடங்களான 'பார்'களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட்டும், உரிமையாளர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். அதை, 'டாஸ்மாக்' மாவட்ட மேலாளர்களும் கண்டு கொள்வதில்லை என்ற, புகார் எழுந்துள்ளது.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,820 மதுக்கடைகள் வாயிலாக மதுபானங்களை விற்கிறது. இந்த மதுக்கடைகளில், பாதிக்கும் மேற்பட்டவற்றில், மதுக்கூடங்களான, பார்கள் செயல்படுகின்றன. அவற்றில் குளிர்பானம், தின்பண்டங்கள் விற்க மட்டுமே அனுமதி; ஆனால், முறைகேடாக மது வகைகளும் விற்கப்படுகின்றன. இதற்கு சில கடை ஊழியர்களும், அதிகாரிகளும் உடந்தை. விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், சட்டவிரோத மது விற்பனையை தடுக்க அனைத்து மதுக்கூடங்களிலும் மற்றும் தனியார் நடத்தும் கிளப்களிலும், கேமராக்களை பொருத்துமாறு, மது விலக்கு ஆயத்தீர்வை துறை கடந்த மாதம் உத்தரவிட்டது.அதை பின்பற்றாத மதுக் கூடங்களின் உரிமத்தை ரத்து செய்வதுடன், வைப்பு தொகையை பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இன்னும் சில தினங்களில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஆனாலும், பல மதுக்கூடங்களில் கேமரா பொருத்தப்படவில்லை. இதுகுறித்து, மதுக்கடை ஊழியர்கள் கூறியதாவது:எங்களை மிரட்டி கடையை மூட சொல்லி, மதுக்கூட உரிமையாளர்கள் முறைகேடாக மதுபானங் களை விற்கின்றனர்; கேமரா பொருத்துவதால் தவறு செய்வோரை எளிதில் கண்டறிந்து, நடவடிக்கை எடுப்பது சுலபம். எனவே, மதுக்கூட உரிமையாளர்கள் அதிக மது வகைகளை வாங்கி, இருப்பு வைப்பதும் கேமராவில் பதிவாகும். இதனால், அவர்கள் எங்களை மிரட்ட முடியாது. அரசு உத்தரவிட்டும், சென்னையில் உள்ள பல மதுக்கூடங்களில் கேமராக்களை பொருத்தாமல் உள்ளனர். இதே நிலை தான் மற்ற மாவட்டங்களிலும் உள்ளது.இதுகுறித்து, மாவட்ட மேலாளர்களிடம் தெரிவித் தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, கேமராக்களை பொருத்த உயரதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.