உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் மரணம் புடின் மீது பைடன் குற்றச்சாட்டு

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் மரணம் புடின் மீது பைடன் குற்றச்சாட்டு

வாஷிங்டன், ''ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னியின் மரணத்துக்கு அந்நாட்டு அதிபர் புடினே பொறுப்பு,'' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றஞ்சாட்டியுள்ளார். ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் அலெக்சி நாவல்னி, 47. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்த அவர், பல்வேறு ஊழல் புகார்களுக்கு ஆளாகி அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறை வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், திடீரென மயங்கி விழுந்தார். சுயநினைவின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். முன்னதாக, 2021ல் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்ற நாவல்னி, சுயநினைவின்றி மயங்கி விழுந்தார். ஜெர்மனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, உணவில் விஷம் வைக்கப்பட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதில், ரஷ்யாவுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை, அந்நாடு மறுத்தது. இந்நிலையில், நாவல்னியின் மர்ம மரணம், சர்வதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பேசிய அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:புடின் அரசின் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்தவர் அலெக்சி நாவல்னி. அவரது மறைவு ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை; மாறாக கோபத்தை ஏற்படுத்துகிறது. நாவல்னியின் மறைவுக்கு காரணம் எதுவாக இருந்தாலும், ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அவரின் ஆதரவு பெற்ற அதிகாரிகளே இதற்கு முழு பொறுப்பு. அவரின் மரணம் ஏற்படுத்திய சூழல், ரஷ்யாவால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, அமெரிக்கா மேலும் உதவ வேண்டும் என்ற அவசியத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை