பா.ஜ., சொல்லும் புராண கதையல்ல: த.வெ.க., - கொ.ப.செ., கொதிப்பு
சென்னை: த.வெ.க., கொள்கைப்பரப்பு பொதுச்செயலர் அருண்ராஜ் அறிக்கை:சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் முதல் இரண்டு கட்ட அகழாய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது தொடர்பான ஆய்வறிக்கையை, கீழடி அகழாய்வு இயக்குநர் அமர்நாத், இந்திய தொல்லியல் துறையிடம் கடந்த 2023 ஜனவரியில் சமர்ப்பித்தார். கீழடி நாகரிகம், 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என, அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அங்கு கிடைத்த, 5,765 தொல்லியல் பொருட்கள் குறித்து, 982 பக்க அறிக்கையில் விளக்கியுள்ளார்.இரண்டு ஆண்டுகளாக அறிக்கையை வெளியிடாமல் காலம் தாழ்த்திய மத்திய அரசு, இரண்டு நிபுணர்கள் அளித்த பரிந்துரைகளை சுட்டிக்காட்டி மறுபரிசீலனை செய்யுமாறு, அமர்நாத்திடம் தொல்லியல் துறை இயக்குநர் நாயக் கூறியிருந்தார். ஆனால், விரிவான தொல்லியல் கண்டுபிடிப்புகளை அடிப்படையாக கொண்டது என அமர்நாத் விளக்கிய சூழலில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.கீழடி ஆய்வு முடிவுகள் என்பது, மக்கள் காதுகளில் பூ சுற்றுவதற்காக பா.ஜ., சொல்லும் புராண கதைகள் அல்ல. அது அறிவியல்பூர்வமான ஆதாரங்களை கொண்டு தொகுக்கப்பட்ட ஆய்வறிக்கை. இத்தகைய கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை வெளிவந்தால், பா.ஜ., காலாகாலமாக சொல்லும் கட்டுக்கதைகள் உடைபடும். சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது வைகை நாகரிகம் என்பதும் வெளிவரும். இதனால், திட்டமிட்டு இந்த ஆய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய, மத்திய பா.ஜ., அரசு முயல்கிறது. தமிழ் மண் என்பது பெரும் கலாசார எரிமலை. அதை தொட நினைத்தால் விளைவு என்னவாகும் என, சிறு குழந்தையும் அறியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.