உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 30 லட்சம் மின் மீட்டர்கள் வாங்குகிறது வாரியம் * ஸ்மார்ட் மீட்டர் திட்டம் தாமதம்

30 லட்சம் மின் மீட்டர்கள் வாங்குகிறது வாரியம் * ஸ்மார்ட் மீட்டர் திட்டம் தாமதம்

சென்னை:தமிழக மின் வாரியம், 30 லட்சம் மீட்டர்கள் வாங்க, 'டெண்டர்' கோரியுள்ளது. இதனால், ஸ்மார்ட் மீட்டர் திட்டம் தாமதமாகும் என, தெரிகிறது. தமிழகத்தில் வீடு உட்பட அனைத்து இணைப்புகளிலும் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, மின் வாரியம் சார்பில், 'ஸ்டேடிக்' எனப்படும், மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.அதில், மின் பயன்பாடு துல்லியமாக பதிவாகும். மின் ஊழியர்கள், இரு மாதங்களுக்கு ஒரு முறை நேரில் சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர்.இதனால், தாமதமாக எடுப்பது, குறைத்து எடுப்பது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன.இது, நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், மின் வாரியத்திற்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது.எனவே, ஆளில்லாமல் தொலைதொடர்பு வசதியுடன், தானாகவே கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.இதற்காக, மாநிலம் முழுதும், 3.03 கோடி இணைப்புகளில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தவும், பராமரிக்கவும் தனியார் நிறுவனத்தை தேர்வு செய்ய, 2023 இறுதியில், 'டெண்டர்' கோரப்பட்டது. அதில், பங்கேற்ற நிறுவனங்கள் சமர்ப்பித்த விபரங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தற்போது மும்முனை பிரிவில், 10 லட்சம் ஸ்டேடிக் மீட்டர்களும், ஒரு முனை இணைப்பில், 20 லட்சம் மீட்டர்களும் வாங்க, டெண்டர் கோரப்பட்டு உள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஸ்மார்ட் மீட்டர் என்பது மிகப்பெரிய திட்டம். ஒரு மீட்டரை பொருத்தி, அதில் இருந்து மாதந்தோறும் மின் பயன்பாட்டை தானாகவே பெறுவதற்கான தொலைதொடர்பு தொழில்நுட்பம் என்பது சவாலான பணி. எனவே, ஸ்மார்ட் மீட்டர் பணியில் அவசரம் காட்டக்கூடாது. டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களின் தொழில்நுட்ப விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.அதே சமயம், புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு வழங்க மீட்டர்கள் தேவைப்படுகின்றன. அதற்காகவே, புதிய மீட்டர்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.100 கிராமங்களுக்குசூரியசக்தி மின்சாரம் தமிழக அரசு, 100 கிராமங்களுக்கு சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்சாரத்தை மட்டும் வினியோகிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, கிராமங்களை அடையாளம் காணும் பணி துவங்கியுள்ளது.தமிழகத்தில் சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல் மின்சாரம் கிடைக்கிறது. அதனால், கிராமங்களுக்கு சூரியசக்தி மின்சாரத்தை வினியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக, 100 கிராமங்களில் அத்திட்டம் செயலுக்கு வருகிறது.இதுகுறித்து, மின் துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது:ஒரு கிலோ வாட் சூரியசக்தி மின் நிலையத்தில் இருந்து, 5 யூனிட் மின்சாரம் கிடைக்கும். ஒரு கிராமத்தில் சராசரியாக, 250க்கும் குறைவான வீடுகளே உள்ளன. எனவே, கிராமத்திலேயே, 250, 500 கிலோ வாட் திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்பட்டு, உற்பத்தியாகும் மின்சாரம், அங்குள்ள வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும்.எந்தெந்த கிராமங்களில் மின் நிலையம் அமைக்கலாம் என்பது தொடர்பான ஆய்வு பணி துவங்கியுள்ளது. இத்திட்டத்தை, மின் வாரிய மும், 'டெடா' எனப்படும் எரிசக்தி மேம்பாட்டு முகமையும் இணைந்து மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை