உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்புமணி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

அன்புமணி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி வீடு உட்பட நான்கு பேரின் வீட்டிற்கு, இ - மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை, மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி., அலுவலகத்திற்கு நேற்று காலை வெடி குண்டு மிரட்டல் விடுத்து மர்ம இ - மெயில் ஒன்று வந்தது. அதில், தி.நகரில் உள்ள பா.ம.க., தலைவர் அன்புமணி ராம தாஸ் வீடு, தேனாம்பேட்டை கஸ்துாரி ரங்கன் சாலையில் உள்ள ஹிந்து ராம் வீடு, அபிராமபுரத்தில் உள்ள பழம்பெரும் நடிகை சச்சு வீடு மற்றும் அய்யப்பன்தாங்கலில் உள்ள நடிகை வனிதாவின் வீட்டிற்கு, வெடி குண்டு வைத்திருப்பதாக குறிப்பி டப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற் கொண்டனர். இதில் எந்தவித வெடிப்பொருட்களும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. பெரும் தலைவலியாக உள்ள இந்த சம்பவத்தில், தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்படும் இ - மெயில் ஐ.டி.,களை வைத்து, போலீசார் விசாரிக்கின்றனர். விமானங்களுக்கு மிரட்டல்: மலேஷிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வரும் 'ஏர் ஏசியா' விமானம் மற்றும் அபுதாபியில் இருந்து சென்னை வரும் 'இண்டிகோ' விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், தரையிறங்கும்போது அவை வெடிக்கும் என, சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு வந்த இ - மெயிலில் குறிப்பிடப் பட்டிருந்தது. இதையடுத்து, சி.ஐ.எஸ்.எப்., எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு இணைந்து, குறிப்பிடப்பட்ட விமானங்கள் தரையிறங்கிய பின், அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். வெடிகுண்டு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை; மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே, கடந்த 8ம் தேதி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலும், 9ம் தேதி மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்தது குறிப்பிடத் தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ