சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு, 'இ - மெயில்' வாயிலாக நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நந்தம்பாக்கம், ஆர்மி பப்ளிக் பள்ளி, அண்ணா நகர் ஆச்சி குளோபல் பள்ளி, கோபாலபுரம் டி.ஏ.வி., பள்ளி, பாரிமுனை செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளி, பெரம்பூர் சனா பள்ளி உள்ளிட்ட 13 பள்ளிகளுக்கு, நேற்று காலை 10:00 மணியில் இருந்து, மாலை 3:40 வரை, இ - மெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனால், பள்ளிகளின் நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடன் பெற்றோருக்கு குறுஞ்செய்தி வாயிலாக, விரைந்து வந்து குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு தகவல் அனுப்பினர். ஒரே நேரத்தில் பள்ளிகளில் இருந்து மாணவ - மாணவியர் கூட்டமாக வெளியேறியதாலும், பெற்றோர் குவிந்ததாலும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.உயிர் பயத்தில் மாணவ - மாணவியரும், அவர்களின் பெற்றோரும் சாலைகளில் ஓட்டம் பிடித்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது. வெடிகுண்டு மிரட்டல் தகவல் மற்ற பள்ளிகளுக்கும் பரவியது. இதனால், பல தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இது தொடர்பாக, சென்னை தெற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா கூறியதாவது:வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் முழுமையாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், எந்தவித வெடி பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன், வெடிகுண்டு மிரட்டல்கள் எந்த இடத்தில் இருந்து வந்துள்ளன; மிரட்டல் விடுக்க பயன்படுத்தப்பட்ட கருவி, சர்வர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். மிரட்டல் அனைத்தும் இ - மெயில் வாயிலாக மட்டுமே வந்துள்ளது. இனி வரும் காலங்களில், இது போன்ற மிரட்டல்கள் வந்தால், ஆசிரியர், மாணவ - மாணவியர், பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் அச்சப்பட வேண்டாம். பள்ளியின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைக்காமல், காவல் துறை உதவி எண்கள் 100 மற்றும் 112க்கு தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அவர் கூறினார்.
மிரட்டல் என்ன?
இ - மெயிலில் கூறப்பட்டு உள்ளதாவது: உங்கள் பள்ளியில், சக்தி வாய்ந்த இரண்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. நுாற்றுக்கணக்கான அப்பாவி குழந்தைகள் பலியாகி விடுவர்; விரைந்து செயல்படுங்கள். இன்னும் சில வினாடிகளே உள்ளன. வெடித்துச் சிதறி பள்ளி ரத்தக்களறி ஆகிவிடும். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் போலீசாரை அழையுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- நமது நிருபர் குழு -