டிசம்பர் 2வது வாரத்தில் பஸ் ஊழியர் ஊதிய பேச்சு
சென்னை:'போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம் குறித்த இரண்டாம் கட்ட பேச்சு, அடுத்த மாதம், 2வது வாரத்தில் நடத்தப்படும்' என, போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.அரசு போக்குவரத்து கழகங்களில், 1.43 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியுள்ளது. பல கட்ட போராட்டங்களுக்கு பின், ஊதிய ஒப்பந்தத்துக்கான முதல் கட்ட முத்தரப்பு பேச்சு, சென்னையில் கடந்த ஜூலை 27ம் தேதி நடந்தது. முதல் கட்ட பேச்சு முடிந்து நான்கு மாதங்களாகி விட்ட நிலையில், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடராஜன், ஆறுமுகநயினார் உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னை, தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறைச்செயலர் பணீந்திர ரெட்டியை நேற்று சந்தித்தனர்.அப்போது அவர்களிடம், 'புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு, அடுத்த மாதம் 2வது வாரத்துக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். ஓய்வு கால பணப்பலன், அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, பணீந்திர ரெட்டி உறுதி அளித்துள்ளார்.