உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு டாக்டர் 24 மணி நேரமும் செயல்பட முடியுமா? அரசுக்கு செவிலியர் சங்கம் சரமாரி கேள்வி

ஒரு டாக்டர் 24 மணி நேரமும் செயல்பட முடியுமா? அரசுக்கு செவிலியர் சங்கம் சரமாரி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு டாக்டரை மட்டும் வைத்து எப்படி 24 மணி நேரமும் தரமான மருத்துவ சேவையை வழங்க முடியும்?' என, தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் கேள்வி எழுப்பிஉள்ளனர்.

இதுகுறித்து, அச்சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை:

'தமிழகத்தில் புதிதாக, 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்; கட்டண வார்டுகளும் அதிகரிக்கப்படும்' என, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இலவச வார்டுகளுக்கும், கட்டண வார்டுகளுக்கும் என்ன வித்தியாசம்? அரசு மருத்துவமனைகளில் பணம் கட்டி சிகிச்சை அளிப்பதுதான், திராவிட மாடலுக்கு பெருமையா?அரசின் கீழ் இயங்கும் ஒரு மருத்துவமனையில், எளியவனுக்கு ஒரு விதமான சிகிச்சை; கட்டணம் செலுத்துவோருக்கு ஒருவிதமான சிகிச்சைதான், நீங்கள் பேசும் சமூக நிதியா?இன்னும், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்பதை வரவேற்கிறோம். ஏற்கனவே இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், 24 மணி நேரமும் பணியாற்ற டாக்டர்கள் நியமனம் செய்துள்ளீர்களா?ஆரம்ப சுகாதார நிலையங்கள், 24 மணி நேரமும் செயல்படுவதாக பெருமை பேசுகிறீர்கள். பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு டாக்டரை வைத்து தான் செயல்படுகின்றன; அந்த ஒரு டாக்டரை வைத்து எப்படி 24 மணி நேரம் தரமான சிகிச்சை அளிக்க முடியும்?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

32,000 காலி பணியிடங்கள்

அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க தலைவர் சாமிநாதன், செயலர் ராமலிங்கம் ஆகியோர், நேற்று அளித்த பேட்டி:அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 32,000 டாக்டர்கள், நர்ஸ்கள், உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறைந்த அளவில் டாக்டர்களை வைத்து, 24 மணி நேரமும் பணி செய்ய அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இது, மக்களின் உயிருக்கும், டாக்டரின் உடல் நலனுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.அனைத்து டாக்டர்களும் சுழற்சி முறையில் பணி செய்யும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும். குறைந்தது, 7 டாக்டர்கள் இல்லாமல், 24 மணி நேர சேவையை நடத்தக் கூடாது. டாக்டர்கள் குறைவாக இருக்கும் மருத்துவமனைகளில், 24 மணி நேர சேவையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kennedy
நவ 07, 2024 17:56

எத்தனை திறந்தாலும் எத்தனை மருத்துவர்கள் நியமித்தாலும் அரசு மருத்துவா மனைகளில் அவர்கள் இருக்கவா போகிறார்கள் அவர்கள் தங்களது மருத்துவமனையில் இருந்து கொண்டு அரசு சம்பளத்தை பெற்று கொள்கிறார்கள். ஏழைகளுக்கு எங்கே இலவசமாக சிறந்த சிகிச்சை கிடைக்கிறது இந்த அவலம் தீர ஒரே வழி அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவ தொழில் என்று உத்தரவு போடுவதுதான் அதை செய்ய அரசிற்கு துணிவு உள்ளதா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை