| ADDED : மார் 21, 2025 01:32 AM
மதுரை:சென்னையைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட குடும்பத்தினர் மதுரை வந்து, வாடகை காரில் அழகர்கோவில் சென்றனர். மதுரை, காமராஜபுரம் மதியழகன், 38, கார் ஓட்டினார். தரிசனம் முடித்து மதியம், 2:00 மணிக்கு மதுரை நோக்கி நத்தம் உயர்மட்ட பாலத்தில் திரும்பினர். ரிசர்வ்லைன் அருகே கார் வேகமாக வந்த போது, பாலத்தின் நடுவில் பஞ்சராகி நின்றிருந்த செங்கல் லோடு லாரி மீது கார் மோதியது. இதில், மதியழகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.காரில் பயணித்த இரு குழந்தைகள் உட்பட ஆறு பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.விபத்து நடந்ததும் காரின், 'ஏர் பேக்' செயல்பட்ட போதும் மதியழகன் இறந்துள்ளார். தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.ஏழு கி.மீ., துாரம் கொண்ட இப்பாலத்தில் போக்குவரத்து குறைவு என்பதால் வாகனங்கள் அதிவேகமாக செல்வது தொடர்கிறது.இந்த பாலத்தில், கடந்த 25 மாதங்களில், 86 விபத்துகள் நடந்து, 23 பேர் இறந்துள்ளனர். போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையும் குறிப்பிட்ட வேகத்தில் செல்ல தொடர்ந்து எச்சரித்தாலும், விபத்தும், இறப்பும் தொடர்கிறது.