13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி சுறுசுறு
சென்னை:பாசனப் பற்றாக்குறை பிரச்னை தீர்ந்துள்ளதால், கடந்தாண்டைவிட சம்பா பருவ நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா பருவ நெல் சாகுபடி பிரதானமானவை. இதற்காக, ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையில் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும். அடுத்தாண்டு ஜனவரி, 28ம் தேதி நீர் திறப்பை நிறுத்த வேண்டும். மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்ததால், குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கப்படவில்லை. ஜூலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. தொடர்ச்சியாக சம்பா சாகுபடிக்கும் நீர்திறக்கப்பட்டு வருகிறது. இதனால், சம்பா சாகுபடிப் பரப்பு மெல்ல வேகமெடுத்துள்ளது. கடந்தாண்டு இதே நாளில், 1.03 லட்சம் ஏக்கர் மட்டுமே, நடவுப் பணிகள் முடிக்கப்பட்டு இருந்தன. தற்போது, 2.54 லட்சம் ஏக்கரில் நடவு முடிந்துள்ளது. வழக்கமாக, டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடக்கும். நடப்பாண்டு 13 லட்சம் ஏக்கரை தாண்டி சாகுபடி நடக்கும் என வேளாண் துறை மதிப்பிட்டுள்ளது.