உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உடுமலை வனத்தில் துப்பாக்கிச் சூடு குண்டு பாய்ந்தவருக்கு எலும்பு முறிவு :நக்சல்கள் ஊடுருவல்?

உடுமலை வனத்தில் துப்பாக்கிச் சூடு குண்டு பாய்ந்தவருக்கு எலும்பு முறிவு :நக்சல்கள் ஊடுருவல்?

உடுமலை : உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில், மலைவாழ் மக்களில் ஒருவரை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதியில் நக்சல்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற கோணத்தில், தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரகத்துக்குட்பட்ட மலைவாழ் குடியிருப்பு பகுதியான கோடந்தூரில், மாரியப்பன், 29, நேற்று முன்தினம், தன் மாடுகளைத் தேடி, வனப்பகுதிக்குள் சென்றார். மலைவாழ் குடியிருப்பில் இருந்து, 5 கி.மீ., தூரத்திலுள்ள காமனூத்து ஓடை அருகே, மாரியப்பன் சென்ற போது, மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். மலைவாழ் மக்கள், தங்களுக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்ள ஒலி எழுப்புவது வழக்கம். அவ்வாறு, ஒலி எழுப்பிய போது, எதிர் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனால், மூவரில் ஒருவர், துப்பாக்கியை எடுத்து மாரியப்பனை நோக்கி சுட்டார். தப்பி ஓட முயற்சித்தபோது, துப்பாக்கி குண்டு மாரியப்பனின் வலது தொடையை துளைத்தது. அந்த மூவரும், வனப்பகுதியினுள் தப்பியோடினர்.

இரவு முழுக்க நடக்க முடியாமல், அங்கேயே கிடந்த மாரியப்பனை, அடுத்த நாள் காலை, கிராம மக்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது உடுமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வன அலுவலர்கள் மற்றும் போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.

வனத்துறை தரப்பில் அதிகாரிகள் சிலர் கூறுகையில்,'மறையூர் மற்றும் உடுமலை வனசரகம் குழிப்பட்டியில் இருந்து சந்தனக்கட்டைகளை கடத்தி செல்லும் கும்பல், தாக்குதல் நடத்தியிருக்கலாம். அக்கும்பல் பயன்படுத்தியது நாட்டுத்துப்பாக்கி ரகமாக இருக்கலாம். உடுமலை, அமராவதி வனசரகத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், தப்பியோடிய கும்பலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

நக்சல் ஊடுருவல்?சில மாதங்களாக வனத்துறை மற்றும் அதிரடிப்படை கண்காணிப்பு, இப்பகுதியில் முற்றிலும் குறைந்துள்ளது. திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட வனப்பகுதியிலிருந்து நக்சல்கள் இப்பகுதியில் ஊடுருவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமும், வனப்பகுதியில் ஆயுதங்களுடன் மர்மநபர்கள் உலா வருவதும் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை