உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவு அல்பாசித் மீது குற்றப்பத்திரிகை

ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவு அல்பாசித் மீது குற்றப்பத்திரிகை

சென்னை:பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட அல்பாசித் மீது, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்ததாக, கடந்தாண்டு நான்கு பேரை, என்.ஐ.ஏ., கைது செய்து சிறையில் அடைத்தது. அதன்பின், கடந்த மாதம், சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட, 20 நகரங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னை புரசைவாக்கம் பகுதியில், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வந்த மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த அல்பாசித் என்பவரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில், அல்பாசித் மற்றும் அவரது கூட்டாளிகள், தமிழகத்தின் நுாற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து, சமூக ஊடகங்கள் வாயிலாக, ஐ.எஸ்., தொடர்பான வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் படங்களை பரப்பி வந்தது தெரியவந்தது. நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவித்து வந்ததையும், ஐ.எஸ்., சித்தாந்தத்தை இளைஞர்களிடையே பரப்புவதை நோக்கமாக கொண்டிருந்ததையும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும், அல்பாசித், ஐ.எஸ்., செயல்பாடுகளை பின்பற்றி வந்ததும், அந்த அமைப்பால் வெளியிடப்படும் வீடியோக்கள் மற்றும் ஆவணங்களை பதிவிறக்கம் செய்ததும் தெரியவந்தது. அத்துடன், தமிழகத்தில் நடந்த பயங்கரவாத மற்றும் சதி வழக்கில் முக்கிய நபராகவும் அல்பாசித் இருந்துள்ளார். அதன் அடிப்படையில், அல்பாசித் மீது, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்விழி முன், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை