உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 15 செ.மீ.,க்கு மேல் மழை பெய்தால் சிக்கல்தான்; சென்னை மேயர் அச்சம்

15 செ.மீ.,க்கு மேல் மழை பெய்தால் சிக்கல்தான்; சென்னை மேயர் அச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சென்னையில் 15 செ.மீ., வரை மழை பெய்தால், உடனே வடிந்து விடும். அதற்கு மேல் மழை பெய்தால் சிக்கல்தான்,'' என, மாநகராட்சி மேயர் பிரியா கூறினார். மழைக்கால பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, ராயபுரம் பகுதிகளில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின், பிரியா அளித்த பேட்டி: வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து, தினமும் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. பகிங்ஹாம் கால்வாயில், 120 கி.மீ., நீளத்திற்கு துார்வாரும் பணி நடந்து வருகிறது. ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் துார்வாரும் பணி நடந்து வருகிறது. அடுத்த ஓரிரு நாட்களில் கனமழை இருக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளதால், முன்னேற்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் அதிக மழைப்பொழிவு இருக்கும்போது, சாலைகளில் பள்ளம் ஏற்படுகிறது. தற்போது, 2,000 சாலைகள் சேதமடைந்துள்ளன. வார்டு வாரியாக நிதி ஒதுக்கி, சீரமைப்பு பணி நடந்து வருகிறது. சென்னையில், 2022ம் ஆண்டு முதல் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு முன், 10 முதல் 15 நாட்கள் மழைநீர் தேக்கம் இருக்கும். தற்போது, இரவில் மழைநீர் தேங்கினாலும், விடிவதற்குள் அகற்றப்பட்டு விடுகிறது. சென்னை ஒரு திட்டமிடப்படாத நகரம். இங்கு நிறைய கால்வாய்கள் உள்ளன. நீர்நிலைகளை பொதுமக்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இச்சூழலில், 15 செ.மீ., வரை மழை பெய்தால் உடனே மழைநீர் வெளியேறுவதற்கான சூழல் நிலவுகிறது. 'மிக்ஜாம்' புயல்போல் 40 செ.மீ., மழை பெய்தால் நீர் வெளியேறுவது சிக்கலாகிவிடும். அப்போது, மோட்டார் பம்புகள் வாயிலாக வெளியேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சிட்டுக்குருவி
அக் 26, 2025 07:18

இரவில் மழைத்தேங்கினாலும் விடிந்தால் வடிந்துவிடும் .மழை இல்லாமலேயே புளியந்தோப்பில் தீபாவலிகூட கொண்டாடமுடியாமல் 5 நாட்கள் மழைபெய்யாமலேயே சாக்கடை 3 அடிக்குமேல் தேங்கி நாற்றம் அடிப்பதினால் தூங்கமுடியவில்லை ,சாப்பிடமுடியவில்லை ,கதவைகூட திறக்கமுடியவில்லை என்று போட்டோவுடன் ஒரு செய்திவந்ததே ஒருவேளை புளியன்தோப்பு ஆந்திராவில் சேர்ந்ததா ?அது சென்னையில் இல்லயா?இந்த நிகழ்வு மனிதகுலத்துக்குக்கே ஒரு மானக்கேடு .உலகம் பூராவுக்கும் தெரிந்ததே .நகராட்சியை நிர்வகிக்கும் உங்களுக்கு தெரியவில்லையா ?இல்லையென்றால் 18 ஆம் தேதி தினமலரைவாங்கி பாருங்கள் .அதற்க்கு ஒரு விளக்கம் தினமலரில் வந்தால் தற்போது சீர்செய்யப்பட்டுவிட்டதா என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும் .


visu
அக் 26, 2025 06:49

மக்கள் ஆக்கிரமித்தால் அகற்றுங்கள் அதை விட்டு நகரம் மூழ்கும் என்றால் என்ன அர்த்தம்


KOVAIKARAN
அக் 26, 2025 06:40

சென்னை ஒரு திட்டமிடப்படாத நகரம். இங்கு நிறைய கால்வாய்கள் உள்ளன. நீர்நிலைகளை பொதுமக்கள் ஆக்கிரமித்து உள்ளனர் என்று மேதகு சென்னை மேயர் பிரியா அவர்கள் கூறுகிறார்கள். கால்வாய்களை ஆக்கிரமித்துள்ள அந்த பொதுமக்களை அங்கிருந்து அகற்றி கால்வாய்க்ளை சரிசெய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லையா திருமதி மேயர் அவர்களே. அதிகாரம் இல்லையென்றால், உங்கள் கட்சியில் அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்டு அவற்றை அகற்றலாமே? செய்வீர்களா? உங்களால் செய்ய முடியுமா? என்று சென்னை வாழ் மக்கள் கேள்வி கேட்கின்றனர்.


முக்கிய வீடியோ