உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இல்லாத ஒன்றை கூறி மக்களை திசை திருப்பும் முதல்வர்: தினகரன்

இல்லாத ஒன்றை கூறி மக்களை திசை திருப்பும் முதல்வர்: தினகரன்

சென்னை : “மக்களை திசை திருப்புவதற்காக, தொகுதி மறுவரையறை கூட்டத்தை, தி.மு.க., கூட்டியுள்ளது,” என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.சென்னை ராமாபுரத்தில், அ.ம.மு.க., சார்பில், நீர் - மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்ற தினகரன் அளித்த பேட்டி:சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்கள் கொதித்து போய் உள்ளனர். எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை நடக்கிறது. இதை திசை திருப்புவதற்காக, தொகுதி மறுவரையறையில், தமிழகத்திற்கு லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை குறைந்துவிடும் என, பொய்யான பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.இல்லாத ஒன்றைக்கூறி, மக்களை திசை திருப்புவதற்காக, கூட்டு நடவடிக்கைக் குழு என்ற பெயரில், தேவையில்லாத கூட்டத்தை தி.மு.க., கூட்டியுள்ளது. நமக்கு போதிய தொகுதி இல்லையென்றால், தமிழகத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்ற எண்ணத்தை, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போலியாக கட்டமைக்க முயல்கின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவை வந்தபோது, தொகுதிகள் எண்ணிக்கை, விகிதாச்சார அடிப்படையில் வரையறுக்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.தொகுதி மறுவரையறை விஷயத்தில், மத்திய அரசே இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம், கண் துடைப்புக்காக நடந்துள்ளது. தொகுதி மறுவரையறைக்கு எதிரானவர்கள் இல்லை எனக் கூறிவிட்டு, முதல்வர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகள் தள்ளி வைக்குமாறு கோருகிறார். அது ஏன் என தெரியவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

ஆட்சி மாற்றத்துக்கு ஊழல் அடித்தளம்!

அமலாக்கத் துறை டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகம் முழுதும் சோதனை நடந்தால், அண்ணாமலை கூறியதுபோல், 40,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பது தெரியும். முறைகேடில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டில்லியில் கெஜ்ரிவால் அரசுக்கு ஏற்பட்ட நிலைமை, தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளதாக எல்லாரும் கூறி வருகின்றனர். ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக டாஸ்மாக் ஊழல் அமைந்துள்ளது. - தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ