மேலும் செய்திகள்
எம்.பி.,க்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை
22-Nov-2024
சென்னை:''பார்லிமென்ட் கூட்டத்தில், தமிழகத்திற்கு புதிய திட்டங்களை கொண்டு வருவதற்காக, மென்மையான குரலில் அல்லாமல், கடுமையாக பேச வேண்டும்,'' என, எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது:பா.ஜ., தங்களது அஜென்டாவை எப்படியாவது நிறைவேற்றுவதில் கவனமாக இருக்கிறது. அதற்கு நாம் இடம் கொடுத்து விடக்கூடாது. கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்பதை உணர்த்த, 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்களுடன் இணைந்து பேசுங்கள்; தொகுதி சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றியும் பேசுங்கள்.நிதி உரிமைகளை பெறும் வகையில், உங்கள் பேச்சு அமைய வேண்டும். மத்திய அரசின் பெரிய திட்டங்கள் தமிழகத்திற்கு வருவதில்லை என்பதை குறிப்பிட்டு பேச வேண்டும்.புதிய திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு மென்மையாக பேசக்கூடாது; கடுமையாக பேச வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை எம்.பி.,க்கள், தங்கள் செயல்பாடுகளை அறிக்கையாக தர வேண்டும். அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் பயணம் செய்யுங்கள். ஒரு தொகுதியை கூட இழக்கக் கூடாது என்ற இலக்கை வைத்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.பின், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடந்த ஆண்டு புயல், வெள்ளம் என இரு பேரிடர்களை தமிழகம் சந்தித்தது. மொத்தம், 37,907 கோடி ரூபாய் பேரிடர் நிதி கேட்டதற்கு, மத்திய அரசு, 276 கோடி ரூபாயை, யானை பசிக்கு சோளப் பொரி போல கொடுத்தது. ஜி.எஸ்.டி., சட்டத்தால், மாநிலத்திற்கு ஏற்படும் பாதிப்பை ஈடு செய்யாததால், தமிழகத்திற்கு, 20,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுஉள்ளது. இதுபோன்ற புறக்கணிப்புகள் குறித்து, கூட்டத்தொடரில் குரல் எழுப்ப வேண்டும்சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் வக்ப் வாரிய திருத்த சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், நிதி ஒதுக்கீட்டில் பா.ஜ., அல்லாத மாநில அரசுகளிடம் காட்டும் பாராமுகம், நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்ட நிதி குறைப்பு, இட ஒதுக்கீட்டு உரிமையை நீர்த்துப் போக செய்யும் சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக, எம்.பி.,க்கள் குரல் எதிரொலிக்க வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
22-Nov-2024