சென்னை: சென்னை மாநகராட்சியில் மழைநீர் கால்வாய் கட்டும் பணிக்காக, 200 கோடி ரூபாய்க்கான நகர்ப்புற நிதி பத்திரங்களை, தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடும் பணியை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.நகரங்களில் கட்டமைப்பு வசதிகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைவசதிகளை மேம்படுத்த அரசுகள் போதிய அளவில் நிதி ஒதுக்க முடியாததால், உள்ளாட்சி அமைப்புகளே பங்கு சந்தை வாயிலாக நிதி திரட்ட மத்திய அரசு அனுமதித்தது. அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி 200 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்தது. கொசஸ்தலையாறு வடிநிலத்தில், வடகிழக்கு பருவமழை காலத்தில் பெரிய அளவில் சேதம் ஏற்படுவதை தடுக்க, இப்பகுதியில் உள்ள எட்டு பெரிய ஏரிகள், 71 சிறிய நீர் ஆதாரங்களை மேம்படுத்த இந்த நிதி செலவிடப்படும். மழைநீர் கால்வாய் கட்டுவது உள்ளிட்ட பணிகளை ரூ.3,059 கோடியில் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டது. இதற்காக, ஆண்டுக்கு 7.97 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில், 200 கோடி ரூபாய்க்கு நிதி பத்திரங்களை வெளியிட்டது. குறைந்த வட்டியாக இருந்தும், முதலீட்டாளர்களிடம் இது அமோக வரவேற்பை பெற்றது. அடிப்படை வெளியீடு தொகையான 100 கோடிக்கு, பங்குச் சந்தை மின்னணு ஏலம் வாயிலாக 4.21 மடங்கு அதிகமாக, அதாவது 421 கோடி கிடைத்தது.அதை தொடர்ந்து, இந்த பத்தாண்டு நிதிப்பத்திரங்களை தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடும் நிகழ்ச்சி, கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. நிறைந்த வைகாசி மாத அமாவாசை மற்றும் கிருத்திகை நாளான நேற்று, மணி ஒலித்து முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, தலைமை செயலர் முருகானந்தம், தேசிய பங்கு சந்தை தலைமை பொருளாதார வல்லுநர் தீர்த்தங்கர் பட்நாயக், நிதித்துறை செயலர் உதயசந்திரன், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த பத்திரங்களை ஏ, ஏ பிளஸ் என நிபுணர்கள் தர மதிப்பீடு செய்திருப்பது, மாநகராட்சியின் நிதி மேலாண்மைக்கு கிடைத்த பாராட்டு என குமரகுருபரன் கூறினார். பத்திர வெளியீடு ஊக்கத்தொகையாக, மத்திய அரசு 26 கோடி ரூபாய் வழங்கும் என தெரிவித்தார்.