சென்னை: 'கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இது குறித்து விரிவான விளக்கம் அளிக்க, என் குழுவுடன், தங்களை சந்திக்க தயாராக இருக்கிறேன்' என, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: கடந்த மே 24, ஜூலை 26ல், தங்களை சந்தித்தபோது, கோவை, மதுரை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கோரி மனு அளித்திருந்தேன். ஆனாலும், அவற்றின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நிராகரித்துள்ளது. நீக்க வேண்டும் இதற்காக, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ள காரணங்கள் பொருத்தமற்றவை. கடந்த 2017ல் உருவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் கொள்கையின்படி, 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியும். கோவை மக்கள்தொகை, 2011ல் 20 லட்சத்தை தாண்டிவிட்டது. மதுரையிலும், எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கும். இந்த அளவுகோல் ஒரே மாதிரியாக கருத்தில் கொள்ளப்பட்டிருந்தால், ஆக்ரா, இந்துார், பாட்னா போன்ற நகரங்களில், மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறி இருக்க வாய்ப்பில்லை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டிருப்பது, மத்திய அரசின் பாகுபாட்டையே காட்டுகிறது. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, 20 லட்சம் மக்கள் தொகை என்ற அளவுகோலை நீக்க வேண்டும். கோவை நகர பயணியரின் அடர்வு எண்ணிக்கை, சென்னையில் உள்ள பயணியரின் அடர்வு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு முடிவு செய்யப்பட்டது பொருத்தமானதல்ல. கோவையும், மதுரையும், சென்னையிலிருந்து வேறுபட்ட பயண முறைகளைக் கொண்டுள்ளன. விரிவான ஆய்வுகளுக்கு பின், 'ரைட்ஸ்' நிறுவனம் தயாரித்த கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை, அதன் தேவையை தெளிவாக கணித்துள்ளது. மறுபரிசீலனை மதுரைக்கு மெட்ரோ ரயில் அமைப்பை ஏற்படுத்தலாம் என, 2011ம் ஆண்டின் விரிவான இயக்க திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் கவனத்தில் கொள்ளவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, தனியார் நிலங்களை கையகப்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பது அனைவரும் அறிந்தது. நில உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகை யில், தமிழகத்தில் இழப்பீடு வழங்கப்படுகிறது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிலம் கிடைப்பதில் தடை இருக்காது. அதை தமிழக அரசு உறுதி செய்யும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு, விரிவான விளக்கங்களை சமர்ப்பிக்குமாறு தமிழக சிறப்பு முயற்சிகள் துறைக்கு நான் அறிவுறுத்தி உள்ளேன். எனவே, இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தாங்கள் தலையிட்டு, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்க, என் குழு வுடன் தங்களை சந்திக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.