முன்னாள் படைவீரர்கள் தொழில் துவங்க கடன் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் துவக்கம்
சென்னை:முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தொழில் துவங்க உதவும் வகையில், 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டத்தை, தமிழக அரசு துவக்கியுள்ளது. முன்னாள் படை வீரர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் துவங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், முன்னாள் படை வீரர்கள் சுயதொழிலில் ஈடுபடவும், சிறந்த தொழில் முனைவோர்களாக மாறவும் தேவையான நிதி மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. தொழில் துவங்குவதற்கு, 1 கோடி ரூபாய் வரை, வங்கி கடன் பெற வழிவகை செய்யப்படும். கடன் தொகையில், 30 சதவீதம் மூலதன மானியமாகும்; மூன்று சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், படைவீரர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும், கலெக்டரை தலைவராக கொண்ட தேர்வு பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு ஒப்புதலின் அடிப்படையில், விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்புடைய வங்கிக்கு தொழில் கடன் ஒப்புதல் பெற பரிந்துரைக்கப்படும். வங்கிகளால் மேலும் சீராய்வு செய்யப்பட்டு, தற்காலிக ஒப்புதல் ஆணை வழங்கப்படும். தொழில் துவங்குவதற்கான வங்கியின் தற்காலிக ஒப் புதல் பெற்றவர்களுக்கு, அரசு செலவில், சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வாயிலாக பயிற்சி அளிக்கப்படும். பின், தொழில் துவங்குவதற்கு தேவைப்படும் கடனுதவி, வங்கிகளால் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக, 155 முன்னாள் படைவீரர்கள் தொழில் துவங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை முதல்வர் வழங்கினார். இத்திட்ட செலவு தொகையாக, 24.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட் டுள்ளது.