மனுக்கள் மீது நடவடிக்கை தலைமை செயலர் உத்தரவு
சென்னை:அரசு அலுவலகங்களில், பல்வேறு சான்றிதழ்களை பெறவும், உதவித்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை பெறவும், பொதுமக்கள் மனு அளிக்கின்றனர். இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் அலைக்கழிப்பிற்கு ஆளாகின்றனர். இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, அனைத்து துறைகளின் செயலர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமை செயலர் முருகானந்தம் எழுதியுள்ள கடிதம்:அதில், அனைத்து அரசு அலுவலகங்களிலும், ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும், பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு, உடனடியாக மனு ஏற்பு ரசீது வழங்க வேண்டும். அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள், ரசீது வழங்கப்பட வேண்டும். பெறப்படும் மனுக்கள் மீது, ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும். நிலுவையில் உள்ள மனுக்கள் தொடர்பாக விண்ணப்பதாரர்கள் கேட்கும் போது, உரிய விளக்கத்தை தொடர்புடைய அதிகாரிகள் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.