உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொலைக்களமாகும் கோவை மத்திய சிறை; கைதியின் வீடியோ வெளியாகி பரபரப்பு 

கொலைக்களமாகும் கோவை மத்திய சிறை; கைதியின் வீடியோ வெளியாகி பரபரப்பு 

கோவை: 'எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. சிறையில் வைத்தே என்னை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள்', என கோவை மத்திய சிறை கைதி பேசும் வீடியோ வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மத்திய சிறையில், விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் என, 3000க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மத்திய சிறையில், சிறைவாசிகளுக்கு சிறை நிர்வாகத்தால் நடத்தப்படும் தொழிற்சாலை, தோட்டம், பெட்ரோல் பங்க், கோழி இறைச்சி கடை என பல்வேறு பணிகள் அளிக்கப்படுகின்றன. கைதிகள் இணைந்து சைக்கிள், ஆட்டோ தயார் செய்துள்ளனர். இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கோவை மத்திய சிறையின் இன்னொரு முகம், வெளி வர துவங்கியுள்ளது.சிறையில் உள்ள கைதிகள் தாக்கப்படுகின்றனர்; பல விதமான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர் என்ற புகார்கள்தான் அந்த இன்னொரு முகம். உதாரணத்துக்கு, சமீபத்தில் கோவை, வெள்ளலுாரை சேர்ந்த புருஷோத்தமன், 59 என்பவர் வழக்கு ஒன்றில் கைதாகி சிறை சென்ற போது, அங்கிருந்த உதவி ஜெயிலர் விஜயராஜ் அவரை, 'உன்னை ஜெயிலுக்குள்ளேயே வைத்து ஒரு வழி பண்ணுகிறேன் வா' என கொலை மிரட்டல் விடுத்ததாக, புகார் மனு அளித்தார்.

மர்ம மரணங்கள்

ஜெயிலுக்குள் ஏற்படும் மரண சம்பவங்கள் மர்மமாகவே உள்ளன. சமீபகாலமாக சிறையில் கைதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது, கண்ணாடியில் தானாகவே மோதிக்கொண்டு காயப்படுவது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஏசுதாஸ், 33 என்ற கைதி, சிறை கழிவறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, சிறை காவலர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு உடலை எடுத்து சென்றனர். பிரேத பரிசோதனையில், அவரின் கழுத்து எலும்பு உடைந்திருந்தது. இதனால் போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து, கொலை செய்யப்பட்டாரா என்ற நோக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று முதல் நான்கு பேர் தாக்கியதில், அவர் கழுத்து எலும்பு உடைந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதில் நான்கு சிறை போலீசார், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விக்ரம், 29. இவர் கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஒரு பிரச்னையில் ராஜலிங்கம், காசிராஜன் ஆகிய இருவரை கொலை செய்தார். இந்த வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனது வக்கீலிடம் வீடியோ காலில், 'என்னுடன் அடைக்கப்பட்டிருந்தவரை கொலை செய்து விட்டனர். அடுத்து நான் தான். எனக்கு ஏதாவது நடந்தால், அதற்கு சிறை காவலர்கள் கிருபாகரன், சதீஷ், பாலு, மோகன்ராம் ஆகியோர் தான் காரணம். எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்,' என பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.சிறை எஸ்.பி., செந்தில்குமாரிடம் கேட்டபோது, ''அப்படி நடக்க வாய்ப்பில்லை. அவர் வீடியோ காலில் பேசும் வீடியோவை வைத்து, 'எடிட்' செய்து தவறாக பரப்பியிருக்க வாய்ப்புள்ளது. முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.சிறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், 'சிறைவாசிகள் தங்களின் உறவினர்களுடன் வீடியோ காலில் பேசும் வசதியை, தமிழக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அதன் படி, ஒவ்வொரு சிறைவாசியும், மாதம் 10 முறை பேச அனுமதிக்கப்படுகின்றனர். விக்ரம், சிறை அதிகாரிகளுக்கு தெரியாமல் வீடியோ கால் செய்து, தவறான தகவல்களை வக்கீலிடம் தெரிவித்திருக்கலாம். அவருக்கு சிறை வளாகத்தில் எந்த துன்புறுத்தலும் ஏற்படவில்லை' என்றார்.என்னதான் பூசி மெழுகினாலும், சிறையில் இருந்து வெளியே வரும் கைதிகள் கூறும் கதைகளும் காண்பிக்கும் தழும்புகளும் உள்ளே நடப்பதை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன.

சிறைக்குள் கஞ்சா புழக்கம் அமோகம்

கோவை மத்திய சிறைக்குள், கஞ்சா புழக்கம் சாதாரணமாகிவிட்டது. அடிக்கடி சிறைவாசிகள் மீது கஞ்சா வழக்குகள் போடப்படுகின்றன. வெளியில் பணிக்கு வரும் சிறைவாசிகள், எளிதாக உள்ளே கஞ்சா எடுத்து செல்கின்றனர். காவலர்களின் உதவியில்லாமல் எடுத்து செல்ல முடியுமா அல்லது சிறை காவலர்கள் முறையாக சோதனை செய்வதில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிறைக்குள் சித்திரவதை?

குற்ற வழக்கில் சிறை சென்று வந்த நபர் ஒருவர் கூறுகையில், 'சிறையில் உள்ள அதிகாரிகள், கைதிகளை முரட்டுத்தனமாக தாக்குகின்றனர்; சித்ரவதை செய்கின்றனர். என்னை காரணமே இல்லாமல் அடித்து துன்புறுத்தியுள்ளனர். கை, கால்களில் தழும்பு இன்னும் உள்ளது' என்று, சட்டையை கழற்றி தழும்புகளை காண்பித்தார்.

சமீபத்தில் சிறையில் நடந்த 'சம்பவங்கள்'

 ஜன., 29ம் தேதி அலெக்ஸ், 27 என்ற கைதி ஆஸ்துமாவால் உயிரிழப்பு ஜன., 27ம் தேதி கைதி ஏசுதாஸ், 33 மர்மமான முறையில் உயிரிழப்பு ஜன., 22ம் தேதி முகத்தை கண்ணாடியில் மோதிக்கொண்டாக கைதி செந்தில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் முகத்தில் 16 தையல்கள் போடப்பட்டன. நவ., 7ம் தேதி சிறை கைதி சரவணகுமார் துாக்கிட்டு தற்கொலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

A common Person
பிப் 08, 2025 23:07

எளிதான வழி… குற்றம் செய்யாதே, சிறைக்கு செல்ல தேவை இல்லை!


V வைகுண்டேஸ்வரன்
பிப் 08, 2025 11:22

ரெண்டு கொலைகள் செய்தவன் சொல்வதை வேத வாக்காக நம்பிக்கொண்டு அரசை விமர்சிக்கும் அறிவற்றவர்களைப் பார்த்தால் பரிதாபம் ஏற்படுகிறதா? அப்போ உங்களுக்கு மனநிலை சரியா இருக்கு. மூளையும் வேலை செய்கிறது.


rasaa
பிப் 08, 2025 10:36

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி.


Apposthalan samlin
பிப் 08, 2025 16:54

ஈரோடு இடை தேர்தலே சாட்சி


SUBRAMANIAN P
பிப் 08, 2025 10:03

என்னங்க.. மனுநீதிச்சோழன் ஆட்சியா நடக்குது இங்க.. சொல்ல வந்துட்டீங்க. இது... திராவிட மாடல் ஆட்சி.. இதைவிட மோசமா இருக்கும்.. கொஞ்சம் அடக்கி வாசிக்கிறதுனால இந்த அளவுக்குள்ள இருக்கு.. போவியா...


V வைகுண்டேஸ்வரன்
பிப் 08, 2025 08:04

இந்த கொலைகாரன் விக்ரம் என்ன பெரிய லட்சாதிபதியா இல்ல பிசினஸ் மெக்னட்டா? இந்த நாயை கொன்றால் சிறை அதிகாரிகளுக்கு பத்து பைசா பிரயோஜனம் உண்டா? Whats the motive to kill this worthless, useless criminal?? ஆனால் இதெல்லாம் யோசிக்காமல் விடியல், திராவிட ஆட்சி என்று ஒரு கூட்டம் வரும்.


Kasimani Baskaran
பிப் 08, 2025 07:32

மாடல் ஆட்சியில் எல்லாமே சிறப்போ சிறப்பு. கோவை தமிழகத்தில்தான் இருக்கிறதா என்று உடன்பிறப்புக்கள் கேள்வி.


Venkateswaran Rajaram
பிப் 08, 2025 07:09

கத்தி எடுத்தவன் கத்தியால தான் சாவான் என்கிற பழமொழி இதுதான்... உனக்கு ஏன் பயம் வருகிறது நீதான் ஏற்கனவே இரண்டு பேரை கொன்றவன் தானே.. நீ கொல்லும் பொழுது அந்த உயிர் எப்படி துடித்திருக்கும், அவர்களை நம்பி எத்தனை பேர் இருந்திருப்பார்கள் இதை எல்லாம் உணராமல் கொலை செய்துவிட்டு இப்பொழுது என்னை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் என்று சொல்வது நகைப்புக்குரியது.. நீ செய்த தவறினால் வாழ்நாள் முழுவதும் நீ கொலையை பயத்தில் தான் இருக்க வேண்டும் இதுதான் உனக்கு சிறந்த தண்டனை


Dinesh
பிப் 08, 2025 05:05

அவர்கள் என்ன தியாகிகளா? ...........................


J.V. Iyer
பிப் 08, 2025 04:26

எல்லாம் இந்த பாழாய்ப்போன சினிமாவைப்பார்த்துதான்.. சினிமா ஒழிந்தால்தான் தேசம் உருப்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை