உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி, ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கு கவனிப்பு கோவை மாநகராட்சியில் தி.மு.க., தாராளம்

கூட்டணி, ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கு கவனிப்பு கோவை மாநகராட்சியில் தி.மு.க., தாராளம்

கோவை:கோவை மாநகராட்சி தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், பொங்கல் கொண்டாடுவதற்காக, பொறுப்பு அமைச்சரான முத்துசாமி, தலா 1 லட்சம் ரூபாய் வீதம், 'பண்டிகை பணம்' வழங்கினார்.கோவை மாநகராட்சியில் உள்ள, 100 வார்டுகளில், 96 கவுன்சிலர்கள் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள். இவர்களை, மேயர் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டனர். 'அமைச்சர் முத்துசாமி வருகிறார்; அரசு விருந்தினர் மாளிகைக்கு வாருங்கள்' என, அழைப்பு விடுத்தனர்.

அறிவுரை

அதன்படி சென்ற கவுன்சிலர்களை, மண்டல வாரியாக பிரித்து அமைச்சர் முத்துசாமி சந்தித்தார். ஒவ்வொருவரிடம், 'கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும். வார்டு பணிகளை தீவிரப்படுத்துங்கள்; பொங்கல் விழா நடத்துங்கள்; விளையாட்டு போட்டிகள் நடத்தி, மக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குங்கள்' என, அறிவுரை கூறி, ஆளுக்கொரு கவர் கொடுத்துள்ளார். தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளான காங்., - இ.கம்யூ., - மா.கம்யூ., மற்றும் ம.தி.மு.க., கவுன்சிலர்களுக்கும், இதே போன்ற பொங்கல் பரிசுத் தொகை அடங்கிய கவர் வழங்கப்பட்டது.ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது:தீபாவளி பண்டிகைக்கு கொடுத்தது போல், தற்போது பொங்கலுக்கும் பண்டிகை பணம் கிடைத்துஉள்ளது. கவுன்சிலர்களுக்கு 1 லட்சம்; நிலைக்குழு தலைவர்களுக்கு 2 லட்சம்; மண்டல தலைவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டன. தி.மு.க.,வில் இருக்கும் நிர்வாகிகள் சிலருக்கு 5 லட்சம் ரூபாய் வரை கொடுக்கப்பட்டது. பதவிக்கு ஏற்ப தொகை மாறுபட்டு இருந்தது.சந்தோஷமான நிகழ்வுதான் என்றாலும் இதிலும், சில சங்கடங்கள் ஏற்பட்டிருக்கிறது. உயர் பதவியில் இருப்பவர்கள், டெண்டர் இறுதி செய்யும் அதிகாரத்தில் இருப்பவர்கள், 2 முதல் 3 சதவீதம் வரை கமிஷன் பெறுகின்றனர்.

புகைச்சல்

அவர்களுக்கும் கவர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும், கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்களுக்கு மட்டும் குறைந்த தொகை கொடுத்துள்ளனர். இதையெல்லாம் கணக்கில் வைத்து பரிசுத் தொகையை, பகிர்ந்து அளித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், பரிசு கொடுக்கப்பட்டும், இதனால் புகைச்சல்ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மற்ற நகரங்களிலும் பரிசுத்தொகை

தமிழகத்தின் பல நகரங்களிலும் தி.மு.க.,வின் பொறுப்பு அமைச்சர்களாக இருப்பவர்களால், தி.மு.க., கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு 'சிறப்பு கவனிப்பு'களாக பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், இப்படியெல்லாம் கட்சியினரை கவனித்து, உற்சாகப் படுத்தி வைத்திருப்பதன் வாயிலாக, தேர்தலை எளிதாக சிரமமின்றி எதிர்கொள்ள முடியும் என்பதோடு, பணம் சம்பாதிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இதனால் புதிய தெம்பும், உற்சாகமும் ஏற்பட்டிருப்பதாக தி.மு.க., வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்